காரித்தாஸ்: தடுப்பூசி காப்புரிமைகள் தளர்த்தப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
வளரும் நாடுகள், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு உதவும்வண்ணம், தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படவும், தொழில்நுட்பங்கள் பரிமாறப்படவுமென, அறிவுச்சொத்து உரிமைகள் மீதுள்ள காப்புரிமைகள் தளர்த்தப்படவேண்டும் என்று, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், உலக வர்த்தக அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஜூன் 12, இஞ்ஞாயிறு முதல், 14, இச்செவ்வாய் வரை, WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பு நடத்திய அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்குகொண்ட அதன் உறுப்பினர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம்.
வருவாய் குறைந்த நாடுகளில் 17.6 விழுக்காட்டு மக்கள் மட்டுமே, முதல்கட்ட தடுப்பூசியைப் பெறமுடிந்தது, அதேநேரம், வருவாய் அதிகமுள்ள நாடுகளில் 72.2 விழுக்காட்டினர் அதனைப் பெற்றுள்ளனர் என்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் அறிவிப்பைக் குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், நோய்த் தொற்றால் எளிதில் தாக்கப்படக்கூடிய ஏழைகளுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இக்காரணத்தினாலேயே அறிவுச்சொத்து உரிமைகள் மீதுள்ள காப்புரிமைகள் தளர்த்தப்பட்டால், வருங்காலத்தில் ஏழைகள் பெருந்தொற்றுப் பாதிப்புக்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும் எனவும் காரித்தாஸ் கூறியுள்ளது.
எல்லாச் சூழல்களிலும், குறிப்பாக, பெருந்தொற்றுச் சூழல்களில், நலவாழ்வு வசதிகளைப் பெறுவது அனைவரின் அடிப்படை உரிமையாகும் என்றுரைத்துள்ள உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், வளரும் நாடுகளில் அனைத்து குடிமக்களும், உயிர்காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு வழியமைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று, உலகில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வைத் தொடர்ந்து பாதித்துவருவதையும் ஜான் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்