திருத்தந்தை அனைத்துக் குடும்பங்களையும் அரவணைக்க விரும்புகிறார்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஏற்பதன் அடையாளமாக, உலக குடும்பங்கள் மாநாடு, தலத்திருஅவைகளில் சிறப்பிக்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைமாவட்ட ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் என, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் ஃபாரெல் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 22 இப்புதன் முதல், 26 ஞாயிறு வரை, உரோம் நகரில் நடைபெறும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் கெவின் ஃபாரெல் அவர்கள், உலகில் போர்கள் இடம்பெற்றுவரும் சூழலில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக குடும்பங்கள் மாநாட்டின் முக்கியத்துவம், அம்மாநாடு கொணரும் நன்மைகள், கோவிட்-19 பெருந்தொற்று, குடும்பங்களைப் பாதித்துள்ளவிதம் போன்ற பல்வேறு தலைப்புக்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
திருமணமான தம்பதியர், தங்களின் தூய்மையான முன்மாதிரிகையான வாழ்வால் திருஅவையில் புனிதர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை, சிறப்பாக தன் பேட்டியில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் ஃபாரெல் அவர்கள், வருங்காலத் தம்பதியர், திருமணம் மற்றும், குடும்ப வாழ்வைச் சிறப்பாக அமைப்பதற்கு உதவும்வண்ணம், இத்திருப்பீட அவை அண்மையில் வெளியிட்ட ஏடு குறித்த எதிர்பார்ப்புக்களையும் எடுத்துரைத்தார்.
கோவிட் பெருந்தொற்று, திருஅவையின் மேய்ப்புப்பணியின் எல்லா நிலைகளிலும் பெரிய அளவில் தடங்கலை உருவாக்கியது என நிச்சயமாகக் கூறலாம், கடந்த இரு ஆண்டுகளாக திருஅவையில், செபக் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்துவதற்கும், மக்களை குழுக்களாக ஒன்றுசேர்ப்பதற்கும் இயலாததாக இருந்தது, எனவே உரோம் நகரில் நடைபெறும் இம்மாநாடு, திருஅவைக்குள் வைட்டமின் சத்துக்களைப் புகுத்தும் என்று தான் நம்புவதாக, கர்தினால் ஃபாரெல் அவர்கள் கூறியுள்ளார்.
பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, திருமண வாழ்வுக்குத் தயாரிக்கும் வருங்காலத் தம்பதியருக்கென அண்மையில் வெளியிட்டுள்ள ஏடு, பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்த வழிகாட்டு ஏட்டின் நடைமுறைகள், பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும் எனவும், கர்தினால் ஃபாரெல் அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.
வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டின் நிகழ்வுகள், “குடும்ப அன்பு: ஓர் அழைப்பு மற்றும், புனிதத்துவத்திற்குப் பாதை” என்ற தலைப்பில் இடம்பெறும்.
1994ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் உலக குடும்பங்கள் மாநாட்டை உருவாக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்