புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்து பேராயர் Fortunatus
மேரி தெரேசா: வத்திக்கான்
சில நாடுகளில் புலம்பெயர்ந்தோர் மீது விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிமுறைகள், பல நேரங்களில் மனிதரின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும், மாண்புக்கு உறுதிவழங்கத் தவறுவதாகவும் உள்ளன என்று, ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Fortunatus Nwachukwu அவர்கள் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஐம்பதாவது அமர்வில், புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை குறித்த கலந்துரையாடலில், ஜூன் 24 இவ்வெள்ளியன்று திருப்பீடத்தின் சார்பில், பேராயர் Fortunatus அவர்கள் இவ்வாறு தன் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
தேசிய எல்லைப் பாதுகாப்பு குறித்த நிர்வாக யுக்திகளில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில், அரசியல் ஆதாயங்களைக் கடந்து, மனிதரின் பாதுகாப்புக்கு முக்கிய இடமளிக்கப்படவேண்டும் என்று, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Fortunatus அவர்கள் கேட்டுக்கொண்டார்.
புலம்பெயர்ந்தோர் அனைவரும் தங்கள் நாடுகளில் அமைதி, மற்றும், பாதுகாப்பில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர், ஆயினும் பல்வேறு காரணங்களால் அவர்கள் புலம்பெயர்கின்றனர் என்றுரைத்த பேராயர் Fortunatus அவர்கள், புலம்பெயர்ந்தோரை எண்ணிக்கையாக இல்லாமல், அவர்களை நம் சகோதரர் சகோதரிகளாக நோக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பாக, முறையாக, தன்னார்வத்துடன் மக்கள் புலம்பெயர மாற்றுவழிகள் விரிவாக்கப்படவேண்டியது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் Fortunatus அவர்கள், தோழமை மற்றும், பொறுப்பைப் பகிரும் உணர்வில் மனித வாழ்வையும் மாண்பையும் பாதுகாப்பதற்கு நம் எல்லாருக்கும் தார்மீகக் கடமையும் பொறுப்பும் உள்ளன என்றுரைத்து, தன் உரையை நிறைவுசெய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்