கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Lazarusடன் உரையாடல்
மேரி தெரேசா: வத்திக்கான்
நம்பகமான சான்றுகளைப் பகரும் பக்குவம் அடைந்த, மற்றும், தூய்மையான வாழ்வு வாழ்கின்ற அருள்பணியாளர்களின் உதவியோடு, தீமைகளுக்கும், பாலியல் முறைகேடுகளுக்கும் எதிராகச் செயல்பட முடியும் என்று, அருள்பணியாளர்கள் பேராயத் தலைவர் பேராயர் Lazarus You Heung-sik அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினால்களாக அறிவித்துள்ளவர்களில் ஒருவரான, தென் கொரியாவைச் சேர்ந்த பேராயர் Lazarus You Heung-sik அவர்கள், ஜூன் 24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, அருள்பணியாளர்களின் தூய்மை வாழ்வுக்கென இறைவேண்டல் செய்யும் உலக நாளன்று வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலக அளவில் வீரத்துவமான வாழ்வை வாழ்கின்ற பல அருள்பணியாளர்கள் உள்ளனர் என்று அவர்களைப் பாராட்டிப் பேசியுள்ள பேராயர் Lazarus அவர்கள், அருள்பணியாளர்கள் பற்றி, மனதுக்கு கவலை தருகின்ற மற்றும், அவமானத்தைக் கொடுக்கின்ற செய்திகள் பற்றிச் சொல்வதைவிடுத்து, அவர்கள் பற்றியுள்ள பல அழகான கதைகளைக் கூறலாம் என்று தெரிவித்துள்ளார்.
அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், இறையழைத்தல், பயிற்சிக் கல்லூரிகளில் உருவாக்கம், ஆசியாவில் திருஅவை போன்ற பல்வேறு தலைப்புக்களில் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் பேராயர் Lazarus.
மனிதாபிமானம், ஆன்மீகம் மற்றும், அறிவு ஆகியவற்றில் பக்குவம் அடைந்தவர்களாக இருக்கும் அருள்பணியாளர்களை திருஅவை உருவாக்கினால், பாலியல் முறைகேடு மற்றும், பொதுவாகத் தெரிகின்ற ஏனையத் தீமைகள் பற்றிக் கேள்விப்படுவது குறையும் என்று பேராயர் லாசரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
அருள்பணித்துவ அழைத்தல், கடவுளின் ஒரு கொடையாகும் எனவும், அருள்பணியாளர்கள் மகிழ்ச்சியோடும், புன்னகையோடும் இருக்கவேண்டும், அவற்றையே மற்றவருக்கு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட பேராயர் லாசரஸ் அவர்கள், இறை மக்கள் அனைவரும் புதிய அருள்பணியாளர்கள் எனும் கொடைக்காக, கடவுளிடம் இறைஞ்சவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்