தேடுதல்

திருஅவையின் அன்னை திருஅவையின் அன்னை  

இந்த மே மாதத்தில் உலகின் அமைதிக்காக சிறப்பு செபங்கள்

இந்த மே மாதத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும், சனிக்கிழமையும், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் மற்றும், வளாகத்தில் உலகின் அமைதிக்காகச் செபங்கள் நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும், சனிக்கிழமையும், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் மற்றும், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில்கூடி, திருத்தந்தையோடு இணைந்து உலகின் அமைதிக்காகச் செபிப்பதற்கு புனித பேதுரு பெருங்கோவில் பங்குத்தந்தை அருள்பணி Agnello Stoia அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த மே மாதத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் துவங்கும் சிறப்பு செபம், திருப்பலியோடு மாலை 5 மணிக்கு முடிவடையும்.

மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள் தலைமையில் "Mater Ecclesiae" அதாவது “திருஅவையின் அன்னை” உருவப்படத்துடன் செபமாலை பக்திமுயற்சி பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

“திருஅவையின் அன்னை”

அன்னை மரியாவுக்கு “திருஅவையின் அன்னை” என்ற பெயர் முதலில், நான்காம் நூற்றாண்டில், மிலான் நகரின் புனித அம்புரோசியாரின் எழுத்துக்களில், காணப்படுகிறது.

பின்னர், இப்பெயரை, 1748ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்களும், 1885ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்களும் பயன்படுத்தியுள்ளனர். 

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், அன்னை மரியாவுக்கு, “திருஅவையின் அன்னை” என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகச் சூட்டினார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இப்பெயரை, உலகளாவிய கத்தோலிக்க திருமறை ஏட்டில் சேர்த்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டில் இலத்தீன் வழிபாட்டுமுறை திருநாள் நாள்காட்டியில் இப்பெயரை இணைத்து, திருஅவையின் அன்னை மரியா திருநாள், பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு அடுத்துவரும் திங்களன்று சிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

1645ம் ஆண்டில் “தூணின் நம் அன்னை” பெயரில் முதலில் வழங்கப்பட்ட இந்த உருவப்படம், 1964ம் ஆண்டில் திருஅவையின் அன்னை மரியா என அழைக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2022, 14:43