தேடுதல்

உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு  

Praedicate evangelium குறித்த மாபெரும் முதல் கலந்தாய்வு

திருத்தூது கொள்கை விளக்கத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : கர்தினால் பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நற்செய்தியை அறிவித்தல் எனப் பொருள்படும் ‘Praedicate evangelium’ என்ற திருத்தூது கொள்கை விளக்கம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றான திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

மே 17, இச்செவ்வாயன்று, இத்திருத்தூது கொள்கை விளக்கத்தின் கட்டமைப்பு, மற்றும், அதன் கூறுகள் குறித்து ஆய்வுசெய்வதற்கென, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ஒரு நாள் கருத்தரங்கை திறந்து வைத்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

“நற்செய்தி அறிவிப்பு: கட்டமைப்பு, உள்ளடக்கம் மற்றும், புதுமைபடைத்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு குறித்து கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இத்திருத்தூது கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டதற்குப்பின்னர் இது குறித்து இடம்பெறும் முதல் மாபெரும் கலந்தாய்வு என்று கூறியுள்ளார்.

2013ம் ஆண்டில் நடைபெற்ற புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் கர்தினால்கள் கூட்டத்திற்கு முன்னர் நடைபெற்றுள்ள கர்தினால்கள் அவைகளில், அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து வந்ததற்குப் பதிலளிக்கும் விதமாக ‘Praedicate evangelium’ என்ற திருத்தூது கொள்கை விளக்கம் அமைந்துள்ளது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.  

மேலும், இக்கலந்தாய்வில் கலந்துகொண்ட திருப்பீடப் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர், அருள்பணி Juan Antonio Guerrero Alex. அவர்கள், திருப்பீடத்தின் சொந்த நிதி நடவடிக்கைகள், திருப்பீடத் தலைமையகத்தின் பணியை எளிதாக்குவதற்கும் சாத்தியமாக்குவதற்கும், பொருள் வழிகள் உதவுதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார் .

திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின், திருப்பீடப் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் அருள்பணி Guerrero ஆகியோருடன், திருப்பீடத்தின் தகவல் தொடர்பகத்தின் தலைவர் Paolo Ruffini, தணிக்கை உயர் அதிகாரி Alessandro Cassinis Righini உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்ட ‘Praedicate evangelium’ என்ற திருத்தூது கொள்கை விளக்கம், வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி நடைமுறைக்கு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2022, 15:35