தேடுதல்

கர்தினால் மாரியோ கிரெக் கர்தினால் மாரியோ கிரெக்   (Comunicaciones CELAM)

திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் மாற்றுத்திறனாளிகள்

தனது அருள்பணித்துவ அழைப்புப் பாதையில், மாற்றுத்திறனாளி ஒருவரே தன்னை வழிநடத்தினார். திருஅவை இவர்களைப் புறக்கணித்தால் திருஅவைதான் மாற்றுத்திறன் கொண்டதாக மாறும் - கர்தினால் கிரெக்

மேரி தெரேசா: வத்திக்கான்

“திருஅவை உங்களின் இல்லம், திருஅவையில் ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்கு” என்ற தலைப்பில், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை மே 19 இவ்வியாழனன்று நடத்திய இணையவழி அமர்வு பற்றி அந்த அவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இந்த அமர்வில்,  உலக அளவில் ஆயர் பேரவைகள், பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் என, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ முப்பது பேர் பங்குபெற்றனர்.  

உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் இடம்பெற்றுவரும் ஈராண்டுத் தயாரிப்புப் பணிகளின் முதல்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பங்குபெற்று வந்தாலும், இவ்வியாழனன்று நடைபெற்ற அமர்வு, உலக அளவிலான ஆயர் மாமன்றத் தயாரிப்பு நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு உண்மையிலேயே அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வின்  துவக்கமாக இருக்கிறது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் சைகை மொழியில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய மூன்று பேர் உட்பட, லைபீரியா, உக்ரைன், பிரான்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து பங்குபெற்ற மற்ற மாற்றுத்திறனாளிகளும், இயேசுவோடும் மற்ற சகோதரர் சகோதரிகளோடும் அவரை அறிவிப்பதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகிறோம்?, இயேசுவோடு மேற்கொள்ளும் பயணத்தில் திருஅவை எவ்வாறு வளரவேண்டும் என, தூய ஆவியார் கேட்கிறார்? போன்ற கேள்விகளுக்கு ஆர்வத்தோடு பதில் அளித்துள்ளனர்.

கர்தினால் மாரியோ கிரெக்

இவ்வமர்வில் துவக்கயுரையாற்றிய, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள், மாற்றுத்திறனாளிகளோடு உள்ள தன் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நான் மாற்றுத்திறனாளிகளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன், தனது அருள்பணித்துவ அழைப்புப் பாதையில், மாற்றுத்திறனாளி ஒருவரே தன்னை வழிநடத்தினார், மற்றும், திருஅவை இவர்களைப் புறக்கணித்தால் திருஅவைதான் மாற்றுத்திறன் கொண்டதாக மாறும் என்று, கர்தினால் கிரெக் அவர்கள் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில், 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 16:53