தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  (AFP or licensors)

இரஷ்ய அரசுடன் உரையாடல் நடத்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் தங்களால் இயலக்கூடிய அனைத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றனர் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போருக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக, அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களை நேரிடையாகச் சந்திப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆவலாய் உள்ளார் என்பதை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

புடின் அவர்களைச் சந்திக்க நான் தயார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Corriere della Sera என்ற இத்தாலிய தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியதன் பின்புலத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்யாவிடமிருந்து திறந்தமனம்கொண்ட ஓர் அடையாளத்திற்காக மட்டுமே திருத்தந்தை காத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்றும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் தங்களால் இயலக்கூடிய அனைத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

புடின் அவர்கள் விரும்புவது என்ன, அவர் என்ன செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பதை எமக்குக் கூறுவார் என்று காத்திருக்கிறோம் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இரு மாதங்களுக்கு மேலாக, உக்ரைன் மக்களை வதைத்துக்கொண்டிருக்கும் ஆயுதங்களின் சப்தங்களை அடக்குவதற்குப் பலனுள்ள உரையாடலில் ஈடுபடும் வாய்ப்புக்கு, திருப்பீடத்தின் கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளன என்று உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2022, 16:17