தேடுதல்

உக்ரைனில் பேராயர் காலகர் உக்ரைனில் பேராயர் காலகர் 

திருப்பீடம், உக்ரைன் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது

உக்ரைனின் புவியியல் பகுதி முழுவதுமாக அந்நாட்டிற்கு வழங்கப்படவேண்டும் என்பதையே திருப்பீடம், மற்ற மக்களைச் சந்திக்கும்போது வலியுறுத்தி வருகிறது - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பு, மற்றும், அமைதிக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருப்பது ஆகியவை குறித்து, அந்நாட்டின் விவ் நகரில் அரசு அதிகாரிகளிடம், மே 19, இவ்வியழனன்று எடுத்துரைத்தார், பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

உக்ரைன் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உக்ரைன் நாட்டிற்குச் சென்றிருந்த பன்னாட்டு உறவுகள் திருப்பீடச் செயலர் பேராயர் காலகர் அவர்கள், விவ் நகர் பேராயர் இல்லத்தில், தலத்திருஅவை அதிகாரிகளோடு, அந்நகரின் மேயர் Andriy Sadovyi, ஆளுனர் Maksym Kozytsk ஆகியோரைச் சந்தித்து, உக்ரைன் மீது திருஅவை கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தினார்.

திருத்தந்தை, ஓர் உலகளாவிய மறைப்பணியைக் கொண்டிருக்கிறார், அவர், எல்லா மக்களையும், எல்லாக் காலங்களிலும் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வழிகளை ஊக்கப்படுத்தி வருகிறார் என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், போரின் கொடூரங்கள், மக்களின் துன்பங்கள் போன்றவற்றை திருத்தந்தை கூறும்போது, அவர் உண்மையிலேயே தன் உள்மனதிலிருந்து கவலையோடு கூறுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.

உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர, எத்தகைய உரையாடல்களும், நடவடிக்கைகளும்  தேவை என்பதை தீர்மானிப்பதில் அந்நாட்டு மக்கள், மற்றும், அதன் தலைவர்களின் இறையாண்மை உரிமைகளை மதித்து, அந்நாட்டில் அமைதியைக் கொணரும் வழிகளுக்கு உதவுவதற்கு திருப்பீடம் விரும்புகிறது என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார்.

உக்ரைனின் புவியியல் பகுதி முழுவதுமாக அந்நாட்டிற்கு வழங்கப்படவேண்டும் என்பதையே திருப்பீடம் மற்ற மக்களைச் சந்திக்கும்போது வலியுறுத்தி வருவதாகவும் பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார்.

மே 18 இப்புதனன்று உக்ரைன் நாட்டிற்குச் சென்றிருந்த பேராயர் காலகர் அவர்கள், 20 இவ்வெள்ளியன்று அந்நாட்டில் தன் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 17:13