தேடுதல்

புச்சா நகரில் பேராயர் காலகர் புச்சா நகரில் பேராயர் காலகர் 

உக்ரேனியர்கள் நாட்டை முன்பைவிட சிறப்பாக கட்டியெழுப்ப முயற்சி

போரின் கொடூரங்களைச் சந்தித்துள்ள மக்களின் காயங்கள் குணமாகுவதற்கும், அவர்கள் மன்னிப்பின் அருளைக் காணவும், ஒப்புரவுப் பாதையை மேற்கொள்ளவும் நீண்டகாலம் எடுக்கும் - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பை எடுத்துரைக்கவும், போரை முடிவுக்குக்கொணர உரையாடலை ஊக்குவிக்கவுமென, அந்நாட்டில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மே 20, இவ்வெள்ளியன்று நிறைவு செய்துள்ள பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், உக்ரேனியர்கள் தங்கள் நாட்டை முன்பைவிட சிறப்பாக கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உக்ரைன் நாட்டிற்குச் சென்றிருந்த பன்னாட்டு உறவுகள் திருப்பீடச் செயலர் பேராயர் காலகர் அவர்கள், குடிமக்களுக்கு எதிராக இரஷ்யா போர்க் குற்றங்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் புச்சா நகரைப் பார்வையிட்டபோது ஏற்பட்ட மனத்துயர்களை வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்டார்.

புச்சா நகருக்குச் சென்றபோது, பொருள்களை மட்டுமல்ல, அந்நகரின் நிலைமை குறித்து கற்பனை செய்யவும் ஒருவரைத் தூண்டுகிறது எனவும், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தையும், ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தில் இவர்களின் புகைப்படங்களையும் பார்க்க முடிகின்றது எனவும் பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார்.  

இத்தகைய கொடூரங்களைப் பார்ப்பது தனக்கு இது முதன்முறை அல்ல எனவும், புருண்டியில் நடைபெற்ற பயங்கரமான படுகொலைகளின்போது காயமடைந்தவர்களுக்கு நானே உதவியிருக்கிறேன் எனவும் கூறிய பேராயர் காலகர் அவர்கள், மற்றவர் மீது இத்தகைய பயங்கரங்களைச் சுமத்த மனிதகுலம் சக்தியுடையதாய் இருக்கின்றது எனக் கூறினார்.

புச்சா நகர் கல்லறைகளில் செபிக்கின்றார் பேராயர் காலகர்
புச்சா நகர் கல்லறைகளில் செபிக்கின்றார் பேராயர் காலகர்

இத்தகைய மக்களின் காயங்கள் குணமடையவும், அவர்கள் மன்னிப்பின் அருளைக் காணவும், ஒப்புரவுப் பாதையை மேற்கொள்ளவும் நீண்டகாலம் எடுக்கும் என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், உக்ரேனியர்கள் தங்களின் துன்பங்களுக்கு மத்தியில் நாட்டின் மீள்கட்டமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளதைக் காண முடிகின்றது என்று கூறினார்.  

வசந்தகாலம்

தங்கள் நாட்டையும், நகரங்களையும், கிராமங்களையும் உக்ரேனியர்கள் சுத்தம் செய்ய முயற்சித்து வருவது ஊக்கமளிக்கின்றது, காடுகளிலும், மரங்களிலும் புதிய தளிர் வர ஆரம்பித்திருக்கின்றது, மனஉறுதியோடு நாட்டின் மீள்கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள அம்மக்கள் வெற்றிபெறுவார்கள் என நிச்சயமாகக் கூறலாம் என்றும் பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 17:01