தேடுதல்

உக்ரைனில் பேராயர் காலகர் உக்ரைனில் பேராயர் காலகர்  (ANSA)

பேராயர் காலகரின் உக்ரைனுக்கான 3 நாள் பயணம்

உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, உக்ரைனுக்கான பேராயர் காலகரின் 3 நாள் பயணம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிழக்கு ஐரோப்பிய நாட்டில் நிகழ்ந்துவரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸின் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக, மே 18, இப்புதனன்று, தனது மூன்று நாள் மறைப்பணியைத் தொடங்கியுள்ளார் பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

திருப்பீடம் மற்றும் உக்ரைன் இடையே தூதரக உறவுகளை ஏற்படுத்தியதன் 30ம் ஆண்டு நினைவாக இந்தப்  பயணம் நடைபெறுகிறது என்றும், அமைதியை மீட்டெடுப்பதற்கான உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த வாரம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உக்ரைன் போர், மற்றும் போரின் பன்னாட்டு மற்றும் கிறித்தவ உலகம் முழுமைக்குமான பின்விளைவுகளை மையமாகக் கொண்ட ஒரு பரந்த அளவிலான நேர்காணலின் போது உக்ரைனுக்கான தனது பயணம் குறித்து அறிவித்தார் பேராயர் காலகர்.

இப்பயணமானது முதலில் ஆண்டவரின் உயிர்ப்புத் திருநாளுக்குமுன் திட்டமிடப்பட்டிருந்தது என்றும், ஆனால் உடல்நலம் சார்ந்த காரணங்களால் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Michael Czerny ஆகியோர் உக்ரைனுக்கு திருத்தந்தையின் சிறப்புத் தூதர்களாகச் சென்ற நிலையில், தற்போது பேராயர் காலகர் மூன்றாவது சிறப்புத் தூதராகச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2022, 16:17