தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், லெபனோன் அரசுத்தலைவர் Michel Aoun (21032022) திருத்தந்தை பிரான்சிஸ், லெபனோன் அரசுத்தலைவர் Michel Aoun (21032022) 

திருத்தந்தையின் லெபனோன் திருத்தூதுப்பயணம் பரிசீலனையில் உள்ளது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனோன் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

லெபனோன் அரசுத்தலைவர் Michel Aoun அவர்களின் டுவிட்டர் செய்திக்குப் பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்குள்ள வாய்ப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் திருப்பீட அதிகாரி ஒருவர்.

திருத்தந்தையின் லெபனோன் பயணத்தின் சாத்தியக்கூறு குறித்து, அந்நாட்டு அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், ஏப்ரல் 5, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்திக்குப் பதிலளித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை, லெபனோனுக்கு அளித்துவரும் ஆதரவு, அந்நாட்டின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், அதன் அமைதி மற்றும் நிலைத்ததன்மைக்காக அவரின் இறைவேண்டல்கள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்க, அந்நாட்டு மக்கள் சில ஆண்டுகளாக அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று அரசுத்தலைவர் Aoun அவர்கள் கூறியுள்ளதை, அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேற்கோள்காட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியன்று, திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லெபனோன் அரசுத்தலைவர் Aoun அவர்களை வரவேற்றார். திருத்தந்தையுடனான அவரது சந்திப்புக்குப் பிறகு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார் அவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு  தான் லெபனோன் நாட்டிற்கு வரவிரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்புள்ள லெபனோன் நண்பர்களே, உங்களைச் சந்திக்க நான் பெரிதும் விரும்புகிறேன், உங்களுக்காக நான் தொடர்ந்து இறைவேண்டல் செய்கிறேன், இதனால் லெபனோன் மீண்டும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியாக இருக்கும் என்று அவர் கூறியதை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி, ஈராக்கிலிருந்து திரும்புகையில், தான் பயணித்த விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, லெபனோனுக்குப் பயணம் மேற்கொள்வதாக கர்தினால் Bechara Raïக்கு தான் எழுதிய கடிதத்தில் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த காலங்களில் திருத்தந்தையர் பலர் லெபனோனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 1997ம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களும், 2012ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் லெபனோன் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2022, 15:11