OSCEயின் அரசியல் பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்று OSCEயின் அரசியல் பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்று  

திருப்பீடம்: மனித உரிமை மீறல்கள், அமைதிக்கு அச்சுறுத்தல்

போர் தன்னிலே உலகளாவிய ஒழுங்குமுறையை குலைக்கின்றது. ஆயுதத் தாக்குதல்கள், உலகளாவிய சட்டத்தை மிகக் கடுமையாக மீறுகின்றன - அருள்திரு உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் அமைதியான உலகளாவிய ஒழுங்குமுறை, இராணுவ பலத்தை அல்ல, மாறாக, உலகளாவிய மனித உரிமைகள், மற்றும், அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கப்படுவதை அடித்தளமாகக்கொண்டது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் கூறினார். 

OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை, ஆஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய, வியன்னாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புக்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்திரு யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகளாவிய மனிதாபிமானச் சட்டம், மற்றும், உலகளாவிய மனித உரிமைகள் சட்டம் குறித்து OSCE அவை, இவ்வாண்டு மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், பாதுகாப்பு, அமைதி, மற்றும், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள உறுதியான தொடர்பு குறித்த திருப்பீடத்தின் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மனித உரிமைகள், உலகளாவிய மனிதாபிமான சட்டம்

ஆயுதம் ஏந்திய தாக்குதல்களில், மனித உரிமைகளும், உலகளாவிய மனிதாபிமானச் சட்டமும் மீறப்படுவதைக் குறைப்பதற்கு, பன்னாட்டு சமுதாயத்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என்பதையும், அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

போர் தன்னிலே உலகளாவிய ஒழுங்குமுறையை குலைக்கின்றது எனவும், ஆயுதத் தாக்குதல்கள், உலகளாவியச் சட்டத்தை மிகக் கடுமையாக மீறுகின்றன எனவும் சுட்டிக்காட்டிய அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், அமைதிக்கும், மனித உரிமைகளுக்கும் இடையேயுள்ள வலுவான தொடர்பைக் கோடிட்டுக்காட்டினார்.

உலகளாவிய மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் மீறுகின்ற ஒவ்வொரு செயலும், அமைதிக்கு அச்சுறுத்தலே என்றும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும், திருப்பீடத்தின் பார்வையாளர் அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் எடுத்துரைத்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2022, 15:35