தேடுதல்

மெக்சிகோ அரசுத்தலைவர், கர்தினால் பியெத்ரோ பரோலின் மெக்சிகோ அரசுத்தலைவர், கர்தினால் பியெத்ரோ பரோலின்  

மெக்சிகோவில் தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நினைவு

1992ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியன்று, மெக்சிகோ நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டன.

மேரி தெரேசா: வத்திக்கான்

உண்மையான நற்செய்தி விழுமியங்களை அகற்ற விரும்புவதாகத் தெரிகின்ற தன்னலமிக்க ஆதாயப்போக்குகள் மற்றும், பல்வேறு கருத்தியல்கள் ஆகியவற்றால் உருவாகியுள்ள சவால்நிறைந்த ஒரு காலக்கட்டத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.    

மெக்சிகோ நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, ஏப்ரல் 26, இச்செவ்வாயன்று மெக்கோ நாட்டு ஆயர்கள் துவக்கியுள்ள 112வது ஆண்டு நிறையமர்வு பேரவையில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு, கூறியுள்ளார்.

மெக்சிகோ நாட்டு குவாதலூப்பே அன்னை மரியா தேசிய திருத்தலத்தில், இத்திங்கள் மாலையில், ஆயர்களோடு இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி, ஆயர்களின் 112வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்த கர்தினால் பரோலின் அவர்கள், உலகின் தற்போதைய சூழல்கள் குறித்த தன் எண்ணங்களை, மறையுரையில் எடுத்துரைத்தார்.  

ஒருமைப்பாடு வழியாக துன்புறுவோருக்கு உதவி

கிறிஸ்துவின் உயிர்ப்புக் காலத்தில், அமெரிக்காவின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்ற தனக்கு கிடைத்த நல்வாய்ப்புக்கு நன்றி தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், ஆயர்களும், அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும், மாண்பு மறுக்கப்பட்ட நம் சகோதரர், சகோதரிகளின் காயங்கள் மீது தங்கள் கண்களைப் பதித்து அவர்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.,

பாகுபாடு, ஊழல், நீதிமறுப்பு ஆகியவற்றால் எண்ணற்ற மனிதர்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர், இச்சூழலில், கிறிஸ்தவ சமுதாயங்கள் பொதுநலனைக் கருத்தில்கொண்டு, ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வழிகளைத் தேடுமாறு வலியுறுத்திக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தலத்திருஅவைக்குள் உரையாடல் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உலகெங்கும் சென்று, என் மக்களைச் சந்தித்து, உண்மைக்கும், அன்பின் வல்லமைக்கும் சாட்சிகளாக விளங்குங்கள் என்றும், மற்றவரின் காயங்களின் குணமாக்குங்கள், மற்றும், துயரங்களைக் களையுங்கள் என்றும், இறைத்தந்தையின் பரிவன்பை அவர்கள் அனுபவிக்க உதவுங்கள் என்றும், ஒவ்வொரு நாளும் நம் ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

1992ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியன்று, மெக்சிகோ நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டன. அந்நிகழ்வின் 30ம் ஆண்டு நிறைவு, ஏப்ரல் 26, இச்செவ்வாயன்று, கல்வித்துறையிலும் சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2022, 15:10