தேடுதல்

இந்தியாவில் உலக அன்னை பூமி நாள் இந்தியாவில் உலக அன்னை பூமி நாள்  

பூமிக்கோளத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை அவசியம்

இப்பூமியைப் படைத்த கடவுளே, நம் எல்லாரையும் படைத்து, அதில், நாம் அனைவரும் உடன்பிறப்புக்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு, அவரே நமக்கு அழைப்புவிடுக்கிறார் - கர்தினால் செர்னி

மேரி தெரேசா: வத்திக்கான்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கு, பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்படவேண்டியது, எக்காலத்தையும்விட, இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட 52வது உலக அன்னை பூமி நாள் பற்றிய சிந்தனைகளை, வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்ட, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்காலத் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இப்பூமிக்கோளம் பாதுகாக்கப்படவேண்டும் என்று, அதிக அளவில் வலியுறுத்தி வருவதற்குரிய காரணங்களை எடுத்துரைத்தார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் படைத்த கடவுளே, நம் எல்லாரையும் படைத்து, அதில் நாம் அனைவரும் உடன்பிறப்புக்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு, அவரே நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்பதால், திருஅவை இப்பூமியைப் பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றது என்று, கர்தினால் செர்னி அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நம் பொதுவான இல்லத்தில், ஒரே குடும்பமாக வாழவேண்டும் என்பதையும், இந்த இல்லத்தைப் பராமரிப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளத் தவறியதால், நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தும் ஆபத்துக்கள் என்ன என்பதையும், இந்த உலக பூமி நாள் நினைவுபடுத்துகிறது என்றும், கர்தினால் செர்னி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருஅவையின் தலைமைப்பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து வலியுறுத்திவருவதோடு, Laudato si' என்ற தனது முதல் திருமடலை, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வெளியிட்டுள்ளார் எனவும், கர்தினால் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது மூன்றாவது திருமடலில், இப்பூமியில் வாழ்கின்ற நாம் எல்லாரும் சகோதரர் சகோதரிகளாக, அதனைப் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றும், கர்தினால் செர்னி அவர்கள், வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2022, 15:12