தேடுதல்

கீவ் நகரிலிருந்து புலம்பெயரும் மக்கள் கீவ் நகரிலிருந்து புலம்பெயரும் மக்கள்  

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டுடன் உடனிருக்க அழைப்பு

போர் சூழ்ந்த சூழலில் கீவ் நகரின் தற்போதைய நிலைமையை விவரிக்கும் உக்ரைனுக்கான திருப்பீடத் தூதர், போரை எதிர்கொள்ளும் ஆயுதங்களாக ஒற்றுமை மற்றும் அன்பை சுட்டிக்காட்டியுள்ளார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas அவர்கள், வத்திக்கான் செய்தித்துறைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், போர் சூழ்ந்த சூழலில் கீவ் நகரின் தற்போதைய நிலைமையை விவரித்துள்ளதுடன் போரை எதிர்கொள்ளும் ஆயுதங்களாக ஒற்றுமை மற்றும் அன்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிப்ரவரி 24 முதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும், நகரின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துவருகின்றன என்று கூறியுள்ள பேராயர் Kulbokas அவர்கள், Irpin, Kyiv, Kharkiv, Chernihiv, Mariupol ஆகிய நகரங்களோடு ஒப்பிடுகையில் கீவ் நகரம் சில விடயங்களில் அமைதியாக இருக்கிறது என்பதை அடிகோடிட்டுக் காட்டியுள்ளார்

பல்வேறு ஆபத்துகள் இருந்தபோதிலும், தன்னார்வ உதவிப் பணியாளர்கள் சில மீட்டருக்குள்ளேயே அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளைத் துணிச்சலாகக் கடந்து சென்று, ஊரடங்கு உத்தரவு தொடங்கும் இரவு 8:00 மணி வரை தேவைப்படுபவர்களுக்கு பொருட்களை விநியோகிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் பேராயர் Kulbokas தெரிவித்துள்ளார்.

போரை எதிர்கொள்ளும்போது, ​​​​ தாழ்ச்சி, கடவுளுக்கு முற்றிலுமாக கையளித்தல் ஒற்றுமை மற்றும் அன்பு ஆகியவைதான் முக்கிய ஆயுதங்கள் என்று வலியுறுத்திய பேராயர், Kulbokas, நாம் இங்கே ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், கடவுளுக்கு நெருக்கமாகவும், உண்மையாகவும் இருந்தால், அவர் நம்மைக் கவனித்துக்கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உண்ணா நோன்பு, இறைவேண்டல், மிகுந்த மனத்தாழ்மை மற்றும் அன்பின் வழியாக இந்தப் போரின் தீமையை நாம் வெல்ல முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2022, 14:35