அனைவருக்கும் நலவாழ்வு பாதுகாப்பு வழங்குவது "தார்மீகக் கடமை"
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கோவிட-19 தடுப்பு மருந்துகள் சரிநிகரற்ற முறையில் விநியோகிக்கப்பட்டதன் விளைவுகள் குறித்து திருப்பீடம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. அமர்வில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
மார்ச் 16, இப்புதனன்று, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீட அலுவலகம், ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்த 49வது அமர்வில் தன் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளது.
தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவுசார் சொத்து உரிமைகளின் பங்களிப்பையும், அதன் முழு ஈடுபாட்டையும், உரிமைகளையும் பாராட்டி வரவேற்றுள்ள திருப்பீடம், இத்தகைய உரிமைகள் எல்லாவற்றிற்கும் மேலாக பொது நலனை ஊக்குவிப்பதாகவும் சமூக மற்றும் பொருளாதார நலனுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை "தார்மீகக் கடமை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள திருப்பீடம், உலகளவில் சுகாதாரப் பாதுகாப்புகளை வழங்குவதில் அது தொடர்புடைய சட்ட விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.
நாடுகளுக்குள்ளேயும் நாடுகளுக்கு இடையேயும் திறமையான ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்போது, கொள்கைகள், சட்டங்கள், ஒற்றுமை மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஆராய்ச்சி, அறிவு மற்றும் பொருள்களைப் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும் பரந்த மனநிலையையும் இது உருவாக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது திருப்பீடம்.
புதிய மற்றும் தாராள மனப்பான்மையின் அவசியத்தை கருத்தில் கொள்ளவும், பொது நன்மையை மேம்படுத்துவதில் உலகளாவிய அணுகுமுறையை உறுதிசெய்யவும், தடுப்பூசிகளின் பயன்பாடு அனைவரையும் சென்றடையவும், நியாயமான மற்றும் நிலையான பொருளாதார மாதிரியை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது திருப்பீடம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்