தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

உக்ரைனில் போரை நிறுத்துமாறு கர்தினால் பரோலின் அழைப்பு

ஆயுதமேந்திய வன்முறைக்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ அவர்கள், இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 8, இச்செவ்வாயன்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov அவர்களுடன் தொலைபேசியில் பேசியபோது, உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

மார்ச் 8,  இச்செவ்வாயன்று கர்தினால் பரோலின் அவர்கள் மேற்கொண்ட இந்தத் தொலைபேசி உரையாடலில், அமைதிக்கான திருத்தந்தையின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியதோடு, எந்தவகையான பேச்சுவார்த்தைகளுக்கும் இடைநிலையாளராக இருந்து செயல்படுவதற்கும் தயாராக இருக்கும் திருத்தந்தையின் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தொலைபேசி உரையாடலில் உக்ரைனில் தொடர்ந்து நடந்துவரும் போர் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், மார்ச் 6, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் உக்ரைன் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தி பற்றி உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மனிதாபிமான வழியில் பாதுகாக்கப்படுவதற்கும், ஆயுதமேந்திய வன்முறைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, கர்தினால் பரோலின் அவர்கள், Lavrov அவர்களைத் தனது தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலால் அவதியுறும் மக்களுக்காகவும், போரிலிருந்து தப்பிக்க வெளியேறும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காகவும், உக்ரைனிலும் உலகின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக்கொணரும் அரசியல் தீர்மானங்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு மார்ச் 6, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2022, 14:31