தேடுதல்

கர்தினால் Marc Quellet கர்தினால் Marc Quellet 

புதிய கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கிவைக்கும் திருத்தந்தை

கற்புடைமை, தேவ அழைத்தல், பாரம்பரியம் என்ற மையக்கருத்துடன் கருத்தரங்கு ஒன்றை திருப்பீடத்தில் தொடக்கிவைக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தேவ அழைத்தல்களுக்குப் புதுத் தூண்டுதல்களை வழங்கும் நோக்கத்தில், கற்புடைமை, தேவ அழைத்தல், பாரம்பரியம் என்ற மையக்கருத்துடன் கருத்தரங்கு ஒன்றைத் திருப்பீடத்தில் தொடக்கிவைக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்களுக்கான திருப்பேராயம், மற்றும் தேவ அழைத்தல் குறித்து ஆய்வு செய்யும் மையம் ஆகியவைகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிப்ரவரி 17 முதல் 19 வரை, வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கைத் திருத்தந்தை துவக்கிவைப்பார்.

“குருத்துவத்தின் அடிப்படை இறையியல் நோக்கி” என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில், பயணிக்கும் திருஅவையின் உறுப்பினர்களாக ஆயர்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், துறவறத்தார் என பல்வேறு தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிவித்துள்ளார் ஆயர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Quellet.

கத்தோலிக்கத் தலைமைப்பீடத்தில் உள்ள பல்வேறு உயர் துறைகளின் தலைமையில் வழிநடத்தப்படவுள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கில் “பாரம்பரியமும் புதிய கீழ்வானங்களும்”, “தூய மூவொரு கடவுள், மறைப்பணி, அருளடையாளங்கள்”, “கற்புடைமை, தனிவரம், ஆன்மிகம்” என்ற மூன்று தலைப்புகளில் வழிகாட்டுதல் உரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2022, 15:33