கருணைக்கொலை கருணைக்கொலை 

கருணைக்கொலை குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு

கருணைக்கொலை குறித்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்புக்கு இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதை, வத்திக்கானும், இத்தாலிய ஆயர்களும் வரவேற்றுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலியில் கருணைக் கொலையைத் தடைசெய்யும் தண்டனைச் சட்டத் தொகுப்பு எண் 579ஐ திரும்பப் பெறுவது குறித்து பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதியளிக்காததை பாப்பிறை வாழ்வுக் கழகமும், இத்தாலிய ஆயர்களும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாப்பிறை வாழ்வுக் கழகம், மனித வாழ்வு மதிப்புமிக்கது மற்றும், அது மதிக்கப்படவேண்டியது என்றுரைக்கும் கத்தோலிக்கத் திருஅவை, தற்கொலையையும், மற்றவர் உதவியால் ஆற்றப்படும் தற்கொலையையும் எதிர்க்கிறது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

அதோடு, திருத்தந்தையும், இதே கருத்தை பலமுறை நினைவுபடுத்தியுள்ளார் என்றும் அக்கழகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

நோய் முற்றிய நிலையிலுள்ள நோயாளர்களைப் பராமரிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ள பாப்பிறை வாழ்வுக் கழகம், இந்நோயாளிகளைப் பராமரிப்பது குறித்த இத்தாலிய சட்டம் மிகச் சிறிய அளவிலே அறியப்பட்டுள்ளது மற்றும், அச்சட்டமும் மிகச் சிறிய அளவிலே நடைமுறையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது, துன்புறும் பலருக்கு உண்மையிலே உதவுவதாய் இருக்கும் எனவும், பாப்பிறை வாழ்வுக் கழகம் கூறியுள்ளது.  

இதற்கிடையே, கருணைக்கொலையை  சட்டப்படி அங்கீகரிப்பதற்கென, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு, குறைந்தது ஐந்து இலட்சம் கையெழுத்துக்கள் தேவையாயிருந்தவேளை, இதனை ஆதரிப்போர் அதைவிட இருமடங்கு கூடுதலாக, அதாவது 12 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்திருந்தனர். ஆயினும், இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு அனுமதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2022, 14:55