அசிசியில் வறியோர் சந்திப்பு அசிசியில் வறியோர் சந்திப்பு 

வறியோரில் நாம் கிறிஸ்துவைக் கண்டுணர திருத்தந்தை அழைப்பு

வறியோர் வழியாக, கடவுள் நமக்குக் கூறவிரும்பும் மறைபொருளான ஞானத்தை வரவேற்க நாம் அழைப்புப்பெற்றுள்ளோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வறியோரில் கிறிஸ்துவைக் கண்டுணர்ந்து, அவர்களின் துயர் துடைக்கப்படுவதற்கு நம் குரலை உயர்த்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 13, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 14, இஞ்ஞாயிறன்று திருஅவையில் கடைப்பிடிக்கப்படும் ஐந்தாவது உலக வறியோர் நாளை மையப்படுத்தி இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை, வறியோர் வழியாக, கடவுள் நமக்குக் கூறவிரும்பும் மறைபொருளான ஞானத்தை வரவேற்கவும், வறியோரின் நண்பர்களாக இருக்கவும், அவர்கள் பேசுவதைக் கேட்கவும், அவர்களைப் புரிந்துகொள்ளவும் நாம் முயற்சிக்கவேண்டும் என்ற கூறியுள்ளார்.

2016ம் ஆண்டில் இரக்கத்தின் யூபிலி ஆண்டை நிறைவுசெய்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறாகிய, திருவழிபாட்டு ஆண்டின் 33ம் ஞாயிறன்று உலக வறியோர் நாள் கடைப்பிடிக்கப்படுமாறு, உலகளாவியத் திருஅவைக்கு அழைப்புவிடுத்தார்.

நவம்பர் 14, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஐந்தாவது உலக வறியோர் நாள் திருப்பலியை நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஐந்தாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு, நவம்பர் 12, இவ்வெள்ளி காலையில், இத்தாலியின் அசிசி நகர் சென்று, அந்நகரின் தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலில், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏறத்தாழ 500 வறியோரைச் சந்தித்து, அவர்களோடு சேர்ந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 15:26