Fratelli tutti கால்பந்தாட்டக் குழுவின் சீருடையை காண்பிக்கும் கர்தினால் இரவாசி Fratelli tutti கால்பந்தாட்டக் குழுவின் சீருடையை காண்பிக்கும் கர்தினால் இரவாசி 

'ஒதுக்கப்படுதலுக்கு எதிராக ஓர் உதை' – கால்பந்து விளையாட்டு

Roma நாடோடி இனத்தவரின் கால்பந்தாட்டக் குழுவுக்கும், திருத்தந்தையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள Fratelli tutti கால்பந்தாட்டக் குழுவுக்கும் இடையே முதல் விளையாட்டு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Roma என்றழைக்கப்படும் நாடோடி இனத்தவரின் அமைப்பைச் சேர்நதவர்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கால்பந்தாட்டக் குழு ஒன்றும், திருத்தந்தையின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Fratelli tutti கால்பந்தாட்டக் குழு ஒன்றும், நவம்பர் 21, வருகிற ஞாயிறன்று, உரோம் நகரில் கால்பந்து விளையாட்டை மேற்கொள்கின்றனர் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

கலாச்சார திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் ஜியானபிராங்கோ இரவாசி அவர்கள், நவம்பர் 16 இச்செவ்வாயன்று நடைபெற்ற இணையவழி செய்தியாளர்கள் கூட்டத்தில், இத்திருப்பீட அவையும், உரோம் மறைமாவட்டமும் ஏற்பாடு செய்துள்ள கால்பந்து விளையாட்டைக் குறித்து பேசினார்.

'ஒதுக்கப்படுதலுக்கு எதிராக ஓர் உதை' ("A kick against exclusion”) என்ற பெயரில் நிகழும் இந்த கால்பந்து விளையாட்டு, உரோம் நகரில் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழும் Roma நாடோடி இனத்தவர், உரோம் நகரச் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு மற்றும் கூட்டுறவு ஆகிய அம்சங்களை வளர்க்க விளையாட்டுக்கள் பெரும் உதவியாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவந்திருப்பதற்கு ஒரு நடைமுறை வடிவம் கொடுக்கும் எண்ணத்துடன், இந்த கால்பந்து விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, கர்தினால் இரவாசி அவர்கள் கூறினார்.

Roma கால்பந்தாட்டக் குழு மற்றும் திருத்தந்தையின் Fratelli tutti கால்பந்தாட்டக் குழு ஆகிய இரு குழுக்களையும் சார்ந்த விளையாட்டு வீரர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20, இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்திப்பார் என்றும், அவ்வேளையில், Fratelli tutti கால்பந்தாட்டக் குழுவின் 1 என்ற எண் கொண்ட இக்குழுவின் சீருடை திருத்தந்தைக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் Fratelli tutti கால்பந்தாட்டக் குழுவில், திருத்தந்தையின் மெய்காப்பாளர்களான சுவிஸ் வீரர்கள், வத்திக்கானில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று கலாச்சார திருப்பீட அவை அறிவித்துள்ளது.

உரோம் நகரின் Lazio என்ற கால்பந்தாட்ட குழுவுக்குச் சொந்தமான Formello அரங்கத்தில், இந்த கால்பந்து விளையாட்டு, நவம்பர் 21, ஞாயிறு, பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 13:59