திருப்பீடத்தின் பிரதிநிதி - அருள்பணி Juan Antonio Cruz Serrano திருப்பீடத்தின் பிரதிநிதி - அருள்பணி Juan Antonio Cruz Serrano  

"அமெரிக்காவின் மறுமலர்ச்சியை நோக்கி" - அருள்பணி Serrano

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலத்தில், நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடாமல், இன்னும் நீதியான, சமநிலை கொண்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றிலிருந்து வெளிவரும் இக்காலத்தில், நாம் மீண்டும் பழைய வாழ்வுமுறைகளுக்கே திரும்பினால், நாம் இதுவரை அடைந்த துன்பங்களுக்கு பொருளில்லாமல் போய்விடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் பதிவுசெய்தார்.

அமெரிக்க அரசுகளின் நிறுவனம் என்று பொருள்படும் Organization of American States (OAS) அமைப்பு, இணையம் வழியே நடத்திய 51வது அவையில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற அருள்பணி Juan Antonio Cruz Serrano அவர்கள், இவ்வாறு கூறினார்.

"அமெரிக்காவின் மறுமலர்ச்சியை நோக்கி" என்ற மையக்கருத்துடன் இந்த 51வது அவை நடைபெறுவதை சிறப்பாகக் குறிப்பிட்ட அருள்பணி Serrano அவர்கள், அமெரிக்க கண்டம், மீண்டும், மீண்டும் தன்னையே புதுப்பித்துக்கொள்ள தயங்குவதில்லை என்று எடுத்துரைத்தார்.

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலத்தில், நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடாமல், இன்னும் நீதியான, சமநிலை கொண்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளோம் என்று அருள்பணி Serrano அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

அமெரிக்க கண்டம், அதனுள் இயங்கும் அனைத்து அரசுகளின் சங்கமம் என்பதை உணரும் நாம், பன்முகக் கலாச்சாரம், உறவுகளை உறுதிப்படுத்தும் பாலங்களை உருவாக்குதல், யாரையும் ஒதுக்கிவைக்காமல், அனைவரும் இணைந்து பயணித்தல், ஆகிய வழிகளில் முன்னேற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, அருள்பணி Serrano அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அடுத்தவர் மீது அக்கறையேதுமின்றி, ஒருவரையொருவர் சகித்துக்கொண்டு, வாழ்வதை விடுத்து, அடுத்தவரைச் சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்வதும், ஒருவர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் திறந்த மனதை பெற்றுக்கொள்வதும் இன்றைய முக்கியத் தேவைகள் என்பதை அருள்பணி Serrano அவர்கள், தன் இணையவழி உரையில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:27