உலக மீனவர் நாள் உலக மீனவர் நாள்  

மீனவர்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்கள் நிறுத்தப்பட

மீனவச் சமுதாயங்கள், தாங்கள் வாழும்முறையை உலகினருக்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில், 1998ம் ஆண்டில், முதன் முதலாக, உலக மீனவர் நாளைச் சிறப்பித்தன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மீன்பிடித் தொழிலாளர் சமுதாயம், ஏராளமான உரிமை மீறல்களை தொடர்ந்து எதிர்கொண்டுவரும்வேளை, அச்சமுதாயத்தின் உரிமைகள் காக்கப்படுவதற்கு, பன்னாட்டு மீனவத் தொழிற்சாலைகள், அரசுகள், குடிமக்கள் சமுதாயங்கள், அரசு-சாரா அமைப்புகள் போன்ற அனைத்தும் இணைந்து செயல்படுமாறு திருப்பீட அவை ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று, உலக மீனவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இந்த உலக நாளில், மீனவர்களின் உரிமை மீறல்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் மீது, கத்தோலிக்கத் திருஅவை, கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மீன்களைப் பிடித்தல், அவற்றைப் பாதுகாத்தல், அவற்றை விற்பனை செய்தல், அவற்றுக்கு நலமான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல், மற்றும், மீனவத் தொழிலாளரின் நலவாழ்வு ஆகியவற்றில், உலகளாவிய நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து சிந்தித்துப் பார்க்குமாறும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீனவச் சமுதாயங்கள், தாங்கள் வாழும்முறையை உலகினருக்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில், 1998ம் ஆண்டில் முதன் முதலாக, உலக மீனவர் நாளைச் சிறப்பித்தன என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், உலக அளவில் மிக அதிகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாக மீன் உள்ளது என்றும், இது சார்ந்த தொழிலில் மிக அதிகஅளவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

கடலில் பாதுகாப்பு, சட்டத்திற்குப் புறம்பேயும், கட்டுப்பாடின்றியும் மீன்பிடித்தல் போன்றவை குறித்து, உலகளாவிய நிறுவனங்கள் பல்வேறு மாநாடுகள் நடத்தி, ஒப்பந்தங்களை நிறைவேற்றி, அவற்றை அமல்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதைப் பாராட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், அலைகளில்லா கடற்பரப்பில் நிறுத்தப்படும் மீன்பிடிக் கப்பல்களில் பணியாற்றுவோர் எதிர்கொள்கின்ற பல்வேறு கடும் நெருக்கடிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பணியாளர்கள், தரையைவிட்டு வெகுதொலைவில் இருப்பதாலும், இவர்கள் கப்பலைவிட்டு வெளியேவர இயலாததாலும், இவர்கள் சூழ்நிலைகளின் பிணையல் கைதிகளாக துன்பங்களை எதிர்கொள்கின்றனர் எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறியுள்ளார்.

உலக அளவில் மீனவத் தொழில்கள் மற்றும், தொழிற்சாலைகளில் வேலைசெய்வோர் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், ஓராண்டில் 24,000த்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என்றும், இதனால் மீனவத் தொழில், மரணத்தை வருவிக்கும் ஒன்று என்றும், கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி கூறுகிறது. 

மீன்பிடிக் கப்பல் தொழிலாளர்கள், தரமான மற்றும், போதுமான உணவு கிடைக்காமை உட்பட மனிதமற்ற சூழல்களையும், கப்பல் பறிமுதல் செய்யப்படும்போது கைதுசெய்யப்படலையும் எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 15:10