அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு, கர்தினால் கிரெக் செய்தி

எவ்வித தயக்கமும் இன்றி, இறைமக்கள், வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் எண்ணங்களுக்கு செவிமடுக்க ஆயர்கள் அஞ்சவேண்டாம் – கர்தினால் மாரியோ கிரெக்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் நம்பிக்கையாளர்களின் குரல்களுக்கு அந்நாட்டு ஆயர்கள் செவிமடுப்பது, அடுத்துவரும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தகுந்ததொரு தயாரிப்பாக இருக்கும் என்று, ஆயர்கள் மாமன்ற தலைமைச்செயலரான, கர்தினால் மாரியோ கிரெக் (Mario Grech) அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 15, திங்கள் முதல், 18, இவ்வியாழன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில் அந்நாட்டு ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டு கூட்டத்திற்கு, கர்தினால் கிரெக் அவர்கள் அனுப்பிய செய்தியில், தூய ஆவியாரின் துணையோடு ஆயர்கள் மேற்கொண்டுள்ள பயணத்தில், ஆன்மீக அளவில், தானும் இணைவதாகக் கூறியுள்ளார்.

2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கட்ட தயாரிப்புகள், மறைமாவட்ட அளவில் துவங்கியுள்ள இத்தருணத்தில், ‘ஒருங்கிணைந்த பயணம்’ என்ற கருத்தின் ஏழு அம்சங்களை, கர்தினால் கிரெக் அவர்கள் இச்செயதியில் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் மக்கள் என்ற அழைப்பை பெற்றுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் பயணம், திறந்த உள்ளத்துடன் மேற்கொள்ளப்படும் உரையாடல், தெளிந்து தேர்தல், விளிம்பு நிலையில் வாழ்வோரை இணைத்துச் செல்லுதல் ஆகியவை உட்பட ஏழு கருத்துக்களை, கர்தினால் கிரெக் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித தயக்கமும் இன்றி, இறைமக்கள், வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் எண்ணங்களுக்கு செவிமடுக்க ஆயர்கள் அஞ்சவேண்டாம் என்று, தன் உரையில் விண்ணப்பித்துள்ள கர்தினால் கிரெக் அவர்கள், அதேவண்ணம், தலத்திருஅவைகளும், வத்திக்கானுடன் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களில், தயக்கமின்றி, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும், மக்களும் இணைந்து மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும், திருப்பீடத்தின் ஆயர்கள் மாமன்ற செயலகம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்ற உறுதியுடன், கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள் தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2021, 14:22