மலேசியாவில் தீபங்களின் திருநாள் மலேசியாவில் தீபங்களின் திருநாள் 

தீபாவளித் திருநாளுக்கு திருப்பீடம் நல்வாழ்த்து

மதங்கள் மற்றும் குழுமங்களின் தலைவர்கள், தங்களின் மதத்தவர், மற்ற மதத்தினரோடு, குறிப்பாக, பேரிடர்கள் மற்றும், நெருக்கடி காலங்களில் ஒன்றுசேர்ந்து பயணிப்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு நவம்பர் 4ம் தேதி சிறப்பிக்கப்படும் தீபாவளி திருநாளுக்கென்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகின் அனைத்து இந்துமத சகோதரர், சகோதரிகளுக்கு நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை, அக்டோபர் 29, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

“நம்பிக்கையிழந்துள்ள காலங்களில், மக்களின் வாழ்க்கையில், கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து ஒளியைக் கொணர” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இத்தீபாவளிச் செய்தியில், பெருந்தொற்று உருவாக்கியுள்ள கவலைகள் மற்றும், நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள், தங்கள் வாழ்வை ஒளிர்விக்க, இத்திருநாள் உதவட்டும் என்ற நல்வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

தீபங்களின் திருநாள்

தீமை மீது நன்மை வெற்றிகொண்டதைக் கொண்டாடும், தீபங்களின் திருநாளாகிய தீபாவளி சிறப்பிக்கப்படும் வருகிற நவம்பர் 4ம் தேதியன்று, உலகின் அனைத்து இந்துமத சகோதரர், சகோதரிகள், தங்களின் இல்லங்களை ஒளியால் நிரப்பி, பரிசுப்பொருள்களைப் பரிமாறிக்கொள்வர், மற்றும், தங்களின் தெய்வங்களுக்குச் பூஜைகள் செய்வர் என்று  அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுடர்விடும் ஒளிக்கற்றைகள்

தற்போதைய பெருந்தொற்றின் இருளான மேகங்கள் வழியாக, ஒருமைப்பாடு மற்றும், உடன்பிறந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் தெரிகின்றன எனவும், பல்சமயப் பண்போடும், கடமையுணர்வோடும், தேவையில் இருப்போருக்கு உதவுவதன் வழியாக தோழமையுணர்வின் வல்லமை வெளிப்படுகிறது எனவும், இது நம்பிக்கையின் ஒளியைக் காணக்கூடியதாய் ஆக்குகின்றது எனவும் அச்செய்தி கூறுகிறது. 

பெருந்தொற்று காலத்தில், பல்வேறு மதத்தினரும் இணைந்து ஆற்றும் உதவிகள், சமுதாயத்தில் மதங்களின் நற்பயனையும் மதிப்பையும் எடுத்துரைக்கின்றன என்று கூறும் அச்செய்தி, இதனாலேயே, மதங்கள் மற்றும், குழுமங்களின் தலைவர்கள், தங்களின் மதத்தவர், மற்ற மதத்தினரோடு, ஒன்றுசேர்ந்து பயணிப்பதற்கு, குறிப்பாக, பேரிடர்கள் மற்றும், நெருக்கடி காலங்களில், ஒன்றுசேர்ந்து பயணிப்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.   

இத்தீபாவளிச் செய்தியை, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், அந்த அவையின் செயலர் பேரருள்திரு Indunil Kodithuwakku Janakaratne Kankanamalage அவர்களும் இணைந்து கையெழுத்திட்டு அக்டோபர் 29 இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2021, 16:18