லெபனனில் காரித்தாஸ் பணி லெபனனில் காரித்தாஸ் பணி 

கோவிட் பெருந்தொற்று தொடர்புடைய 40 நிவாரணத் திட்டங்கள்

கடவுளின் அன்பை அனைத்து ஏழை மக்களும் அனுபவிக்க, கடந்த 70 ஆண்டுகளாக தன் பணிகளை ஆற்றிவரும் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழை மக்களுடன், குறிப்பாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுடன் எப்போதும் அருகில் இருப்பதே, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் பணி என, அவ்வமைப்பு இவ்வாண்டு கொண்டாடும் 70ம் ஆண்டு நிறைவையொட்டி வழங்கிய பேட்டி ஒன்றில் கூறினார், அவ்வமைப்பின் பொதுச்செயலர் அலோசியஸ் ஜான்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த சில ஆண்டுகளில், அதாவது 1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி, அன்றைய மனிதாபிமானத் தேவைகளைக் கருத்தில்கொண்டு திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, 13 தேசிய காரித்தாஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இருந்த உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, தற்போது 162 நிறுவனங்களுடன், 200 நாடுகள், மற்றும் நிலப்பகுதிகளில் பணியாற்றிவருகின்றது என்பதை சுட்டிக்காட்டினார், பொதுச்செயலர் அலோசியஸ்.

கடவுளின் கருணைநிறை அன்பை அனைத்து ஏழை மக்களும் அனுபவிக்க உதவும்வண்ணம் கடந்த 70 ஆண்டுகளாக தன் பணிகளை ஆற்றி வந்துள்ளது அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு என்றுரைத்த, அதன் பொதுச்செயலர் அலோசியஸ் அவர்கள், மனித மாண்பு, அடிப்படை உரிமைகள், சமூக நீதி ஆகியவைகளைக் கட்டிக்காப்பதில் அது ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடும்படியானது என, வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இயற்கைப் பேரிடர்கள், மனிதரால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், அரசியல் பிரிவினைகள், போர்கள், மத மோதல்கள், காலநிலை பாதிப்புகள், குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர் அதிகரிப்பு, என அனைத்து துயர்நிலைகளிலும் மக்களோடு ஒருமைப்பாட்டை அறிவித்து அவர்களோடு உடனிருப்பதில், பல்வேறு சவால்களை காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார் அலோசியஸ்.

திருத்தந்தையின் அழைப்பிற்கு இணங்க, கோவிட் பெருந்தொற்று தொடர்புடைய நாற்பது நிவாரணத் திட்டங்களுக்கு நிதியுதவி ஆற்றியுள்ளதாகவும், இத்தகைய எடுத்துக்காட்டால் கவரப்பட்ட பல நிறுவனங்கள், குறிப்பாக, பங்களாதேஷின் இஸ்லாமிய உணவு விடுதிகள், புலம்பெயர்ந்த மக்களுக்கு உணவை வழங்கி தங்களுடன் இணைந்து பணியாற்றியதையும் சுட்டிக்காட்டினார், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 15:00