தேடுதல்

இயற்கை வளத்தைப் பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கப்படுகிறது  இயற்கை வளத்தைப் பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கப்படுகிறது  

அனைவருக்கும் மின்சக்தி கிடைப்பதற்கு வழிசெய்வது..

இயற்கை வளங்களிலிருந்தும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்படும் மின்சக்தி, ஏழை நாடுகளுக்கு கிடைப்பதற்கு வழியமைக்கவேண்டியது, பணக்கார நாடுகளின் கடமை - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் அனைவருக்கும் மின்சக்தி கிடைக்குமாறு வழியமைத்தல், நன்னெறி சார்ந்த கடமை என்று, மின்சக்தி தயாரிப்பு மற்றும், அதனைப் பயன்படுத்தல் குறித்து, நியூ யார்க் நகரில், செப்டம்பர் 24, இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையில் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகள், மற்றும், பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவற்றை எட்டுவதற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள ஏழு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

இயற்கை வளங்களிலிருந்தும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்படும் மின்சக்தி, ஏழை நாடுகளுக்கு கிடைப்பதற்கு வழியமைக்கவேண்டியது, பணக்கார நாடுகளின் கடமை எனவும், இவ்வாறு செயல்படுவது, வறுமை மற்றும், பசியை அகற்றுவதற்கு மிக முக்கியம் எனவும், பேராயர் காலகர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இன்று உலகளவில் 75 கோடியே 90 இலட்சம் பேர் மின்சக்தி இன்றி வாழ்ந்துவரும்வேளை, இயற்கை வளங்கள் வழியாகத் தயாரிக்கப்படும் மின்சக்தி, இக்காலத்தில் மிகவும் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், மின்சக்தியை ஏழை நாடுகளுக்கு விற்கும் விலையும், அதற்கு வழங்கப்படும் மானியமும் நியாயமான முறையில் இடம்பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

காலநிலை மாற்றத்தால் ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், நவீன நுகர்வுத்தன்மை, தூக்கியெறியும் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகள் போன்ற விவகாரங்கள் பற்றியும் தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், பண்பாட்டு உலகிற்கு மின்சக்தி தேவைப்படுகின்றது, ஆனால், மின்சக்தி பயன்பாடு, பண்பாட்டை அழிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஐ.நா.வில், செப்டம்பர் 24, இவ்வெள்ளியன்று மின்சக்தி பற்றி உயர்மட்ட அளவில் நடைபெற்ற கூட்டம், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறை என்று சொல்லப்பட்டுள்ளது.

பசிக்கொடுமையை அகற்ற நீண்டகால வளங்கள் தேவை

உலகில் அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் திருப்பீடம் தன் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்பதை உறுதிசெய்யும் காணொளிச் செய்தி ஒன்றையும், பேராயர் காலகர் அவர்கள், ஐ.நா.வின் உணவு அமைப்புமுறைகள் மாநாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஐ.நா.வின் உணவு அமைப்புமுறைகள் மாநாட்டில் திருப்பீடம் முதல் முறையாகப் பங்குகொள்வது பற்றிய மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள பேராயர் காலகர் அவர்கள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும், சத்துணவு பற்றாக்குறையை அகற்றுவதற்கு, உணவு விநியோகம் மற்றும், பாதுகாப்பு அமைப்புமுறைகளில் மாற்றம் தேவை என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 14:55