தேடுதல்

உரோம் நகரில் தற்போது அமலில் உள்ள "Green Pass" உரோம் நகரில் தற்போது அமலில் உள்ள "Green Pass"  

அக்டோபர் 1 முதல் வத்திக்கானில் நுழைய 'Green Pass' அவசியம்

வத்திக்கான் நகர எல்லைக்குள் நுழைவதற்கு, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் 'Green Pass' எனப்படும் 'பசுமை அனுமதி', அல்லது, அதற்கு இணையான வெளிநாட்டு 'பசுமை அனுமதி' அவசியம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று, வத்திக்கான் நகருக்குள் பரவாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக, வத்திக்கான் அரசு, கூடுதல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல், வத்திக்கான் நகர எல்லைக்குள் நுழைவதற்கு, ஐரோப்பிய நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் 'Green Pass' எனப்படும் 'பசுமை அனுமதி', அல்லது, அதற்கு இணையான வெளிநாட்டு 'பசுமை அனுமதி' அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதரின் சுதந்திரம், அவரது உரிமை மற்றும் மாண்பு ஆகியவை மதிக்கப்படும் அதே வேளையில், தற்போது நிலவும் நலவாழ்வு நெருக்கடியை மனதில் கொண்டு, வத்திக்கான் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் கூறியதைத் தொடர்ந்து, வத்திக்கான் நகர அரசு இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆணை, வத்திக்கானில் பணியாற்றுவோர், மற்றும் வத்திக்கானுக்குள் நுழைய விரும்புவோர் அனைவருக்கும் பொதுவானது என்றும், இந்த ஆணையை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், Gendarmerie என்றழைக்கப்படும் வத்திக்கான் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்திக்கானில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்ள விழைவோருக்கு, அந்த வழிபாட்டு நேரத்திற்கு மட்டும், இந்த ஆணையிலிருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதே வேளையில், கோவிட் பெருந்தொற்று தொடர்பான ஏனைய விதிமுறைகளான, உடல் வெப்பநிலையை அறிதல், முகக்கவசம் அணிதல், சமுதாய இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகிய விதிமுறைகள், அவசியம் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 12:43