தேடுதல்

"கடவுளின் குழந்தைகளைப் பாதுகாக்க" - போலந்து நாட்டில் நடைபெறும் கருத்தரங்கின் விளம்பரம் "கடவுளின் குழந்தைகளைப் பாதுகாக்க" - போலந்து நாட்டில் நடைபெறும் கருத்தரங்கின் விளம்பரம்  

திருஅவைக்குள் சிறார்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு

திருஅவையின் பெயர் களங்கப்படுமே என கவலைப்பட்டார்களேயொழிய, சிறார்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவைப் பணியாளர்கள் சிலரது பாலுறவு நடவடிக்கைகளால், சிறார்களின் மாண்பு மீறப்பட்டது மட்டுமல்ல, சிறார்கள், தங்கள் பிற்கால வாழ்வில், கிறிஸ்தவ விசுவாசத்தில், ஆழமாக காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் அறிவித்தார், திருப்பீடத்தின் சிறார் பாதுகாப்பு அவையின் அங்கத்தினர் Myriam Wijlens

சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீடத்தின் அவை, போலந்தின் தலைநகர் Warsawவில் செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஏற்பாடுச் செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றிய Wijlens அவர்கள், அருள்பணியாளர்கள் சிலரால் கடந்தகாலங்களில் தவறாக நடத்தப்பட்ட சிறார்களில் ஏற்பட்டுள்ள இரு பெரும் தாக்கங்கள் குறித்து விவரித்தார்.

சிறார்கள் திருஅவை அதிகாரிகளால் பாலுறவு முறையில் தவறாக நடத்தப்பட்டார்கள் என்ற உண்மையும், அவர்களில் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்பும், தற்போது அதிகம் அதிகமாக வெளிவரத் துவங்கியுள்ளது என்ற, திருப்பீட அவை அங்கத்தினர்  Wijlens அவர்கள், சிறார்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்ற உண்மை தெரிந்திருந்தும் சில உயர் மட்ட அதிகாரிகள், சரியான நடவடிக்கைகளை எடுத்து சிறார்களைக் காப்பாற்றத் தவறியுள்ளதும், தற்போது வெளிவருகிறது என எடுத்துரைத்தார்.

திருஅவையின் பெயர் களங்கப்படுமே என்பது குறித்து திருஅவை அதிகாரிகள் கவலைப்பட்டார்களேயொழிய, சிறார்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்த Wijlens அவர்கள், இதனால், திருஅவை மீது, விசுவாசிகள் வைத்திருந்த நம்பிக்கை குலைக்கப்பட்டு, திருஅவையின் நன்னெறி சார்ந்த தலைமைப் பண்பு குறித்த கேள்வி உருவாகியது எனவும் எடுத்துரைத்தார்.

சிறாரின் உரிமை மீறல் பிரச்சனைகள் தொடர்பாக, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தலையிடுதல், நீதியுடன் செயல்படுதல், குணப்படுத்தும் நடவடிக்கைகள்  போன்ற ஆயர்களின் பணிகள் குறித்து ஆழமாக விவாதிக்க இப்பிரச்சனை அழைப்பு விடுக்கிறது என்பதையும், இவ்விடயங்களில் தங்கள் கடமைகளில் இருந்து தவறிய ஆயர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியாக இருப்பதையும், மேலும் இக்கருத்தரங்கில் கூறினார், திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற Wijlens.

'கடவுளின் குழந்தைகளைப் பாதுகாப்பதில், நாம் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பணி'  என்ற தலைப்புடன், போலந்தில், நான்கு நாள் கருத்தரங்கை நடத்திவருகிறது, திருப்பீடத்தின் சிறார் பாதுகாப்பு அவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 14:31