தேடுதல்

நம்பிக்கையின் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதி என்பது, உடன் பிறந்த உணர்வில் வேரூன்றியதாக இருக்கவேண்டும் எனற அழைப்புடன் ஐ.நா. பொதுஅவைக் கூட்டத்திற்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

'நம்பிக்கையின் வழியே நெகிழ்திறனைக் கட்டியெழுப்புதல்' என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் நகரில் இடம்பெறும் ஐ.நா. கூட்டத்திற்கு திருப்பீடச் செயலர் அனுப்பியுள்ளச் செய்தியில், பெருந்தொற்று, Glasgow நகரில் இடம்பெற உள்ள  COP26 கூட்டம், உலகின் மோதல்கள், அணுஆயுதக் களைவு போன்றவைகள் பற்றிய திருப்பீடத்தின் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுடன் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறும் 76வது பொது அவைக் கூட்டத்திற்கு திருப்பீடப் பிரதிநிதிகளையும், தன் காணொளிச் செய்தியையும் அனுப்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நம்பிக்கையின் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பது குறித்தும், அந்த நம்பிக்கை, மன்னிப்பையும், ஒப்புரவையும் ஊக்குவித்து, வளமான வருங்காலத்தை வடிவமைத்துக் கொடுப்பது குறித்தும், தன் செய்தியில் விளக்கியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஒருமைப்பாட்டினால், புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், பெருந்தொற்று நோய்க்குரிய தீர்வுகள் காணப்படவேண்டும் எனவும், இந்த பெருந்தொற்றினால், பல முன்னேற்றத் திட்டங்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், தன் செய்தியில் விளக்கியுள்ளார் கர்தினால் பரோலின்.

உலகைப் பாதுகாப்பதில் நாம் ஈடுபடவேண்டியதன் தேவையையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருப்பீடச் செயலர், இலாபக் கண்ணோட்டத்தில், மக்களும் இயற்கையும் சுரண்டப்படுவது குறித்து அரசுகள் ஆழமாக சிந்திக்க வேண்டியதன் தேவையை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளைப் பெருக்குகள், வறட்சி, காட்டுத்தீ, பனிப் பாறைகள் உருகுதல், கடல் அரிப்பு, சத்துணவின்மை, நுரையீரல் தொடர்புடைய நோய்கள் அதிகரிப்பு, வெப்பம் அதிகரிப்பு என பல்வேறு பாதிப்புக்களை அனுபவித்துவரும் உலகை காப்பாற்றவேண்டிய மனித குலத்தின் கடமையும் கர்தினால் பரோலின் அவர்களின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் மோதல்களைக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், வேதியியல் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், என மக்களைக் கொல்லும் அனைத்து ஆயுதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் தன்  காணொளிச் செய்தியில்  விடுத்துள்ளார்.

புலம் பெயர்ந்தோர், முதியோர், அப்பாவிகள், கருவில் வளரும் குழந்தைகள், மத நம்பிக்கையாளர்கள் என அனைவரின் உரிமைகளும் மதிக்கப்பட்டு, உடன்பிறந்த உணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும், கர்தினால் பரோலின் அவர்கள், இச்செய்தியில் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2021, 14:18