தேடுதல்

போலந்து கருத்தரங்கில், கர்தினால் ஓ மாலி அவர்கள் உரை வழங்குதல் போலந்து கருத்தரங்கில், கர்தினால் ஓ மாலி அவர்கள் உரை வழங்குதல் 

சிறார்க்கு எதிராக இழைக்கப்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்

கர்தினால் ஓ மாலி : திருஅவைக்காக துயர்களைத் தாங்குவதேக் கடினம் எனில், திருஅவையில், அதுவும் அதன் அருள்பணியாளர்களாலேயே துயர்களை அடைய வேண்டியிருப்பது மிகக்கடினம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

மனித மாண்பின் மீதான முறைகேடுகளும், அவைகளை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டியது மட்டுமல்ல, இழைக்கப்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் கர்தினால் சான் பேட்ரிக் ஓ மாலி.

சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீடத்தின் அவை, போலந்தின் தலைநகர் Warsawவில் செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கில், இரண்டாம் நாள் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, திருப்பீட சிறார் பாதுகாப்பு அவையின் தலைவர், கர்தினால் ஓ மாலி அவர்கள், திருஅவையின் அதிகாரிகள் சிலர், சிறாருடன் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், தங்கள் பதவியைப் பயன்படுத்தி அதை மறைக்க முயன்றதையும் குறித்து விவாதிக்க இங்கு கூடியுள்ளோம் என்றார்.

திருஅவைக்கென துயர்களைத் தாங்குவது சிரமமானது என, புகழ்வாய்ந்த இறையியலாளர் ஒருவர் கூறியதை எடுத்துரைத்த கர்தினால் ஓ மாலி அவர்கள், திருஅவைக்காக துயர்களைத் தாங்குவதேக் கடினம் எனில், திருஅவையில், அதுவும் அதன் அருள்பணியாளர்களாலேயே துயர்களை அடைய வேண்டியிருப்பது மிகக்கடினம் எனக் கூறினார்.

திருஅவை அருள்பணியாளர்களால் சிறார்கள் தவறாக நடத்தப்பட்டது மட்டுமல்ல, அது குறித்து அவர்கள் பேசமுயன்றபோது, அவர்களின் குரலுக்கு செவிமடுக்க மறுக்கப்பட்டதும் நடந்துள்ளது என்ற கர்தினால் ஓ மாலி அவர்கள், இயேசு விரும்பிய அன்பையும், ஒப்புரவையும் உள்ளடக்கிய திருஅவையில் இத்தகைய செயல்பாடுகள் இடம்பெறமுடியாது என மேலும் கூறினார்.

தாங்கள் பாதிக்கப்பட்டாலும், இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளால் மற்றவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இவைகுறித்து, வெளிப்படையாக குரல் எழுப்பிய, பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களின் மனவுறுதி வரவேற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் கர்தினால் ஓ மாலி.

பாதிக்கப்பட்ட மக்களுடன், நீதியையும் ஒப்புரவையும் வேண்டும் அர்ப்பணத்துடன், கடந்த கால தவறுகளை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அன்புடனும் விசுவாசத்துடனும் கூடிய திருஅவையாக நடைபோட, இத்துயர விதைகள் உதவவேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்தி, தன் மறையுரையை நிறைவுசெய்தார், கர்தினால் ஓ மாலி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 14:26