திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் Visvaldas Kulbokas திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் Visvaldas Kulbokas  

பேராயர் Kulbokas: உக்ரேய்ன் மக்களுக்கு திருத்தந்தை ஆதரவு

திருத்தந்தையோடு தான் உரையாடியது, ஒரு தந்தையும் மகனும் உரையாடியது போன்ற நல்லுணர்வை ஏற்படுத்தியது – உக்ரேய்ன் புதிய திருப்பீட தூதர் பேராயர் Kulbokas

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 07, வருகிற செவ்வாயன்று, உக்ரேய்ன் நாட்டின் புதிய திருப்பீடத் தூதராகப் பணியைத் துவக்கவிருக்கும் பேராயர் Visvaldas Kulbokas அவர்கள், செப்டம்பர் 02, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து பணி ஊக்கம் பெற்றுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த பேராயர் Kulbokas அவர்கள், திருத்தந்தை, ஒரு தந்தைக்குரிய அன்போடு தனக்கு ஆசீரளித்து, ஊக்கப்படுத்தி, பணிக்கு அனுப்பியுள்ளார் என்று கூறினார்.

திருப்பீடச் செயலகத்திலும், பல்வேறு திருத்தூது பணித்தளங்களிலும் பணியாற்றியுள்ள, 47 வயது நிரம்பிய, பேராயர் Kulbokas அவர்கள், திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்கள், தனது தாயகமான லித்துவேனியா நாடு போன்றவை பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.  

திருத்தந்தையோடு தான் உரையாடியது, ஒரு தந்தையும் மகனும் உரையாடியது போன்ற நல்லுணர்வை ஏற்படுத்தியது எனவும், உக்ரேய்ன் நாட்டின் மீது திருத்தந்தை வைத்திருக்கும் அன்பையும், அந்நாட்டு மக்கள் அடைந்துள்ள மிகப்பெரும் துன்பங்கள் குறித்த அவரது கவலையையும் மிகத்தெளிவாக உணர முடிந்தது எனவும், பேராயர் Kulbokas அவர்கள் எடுத்துரைத்தார்.

தனது 12ம் வயதிலிருந்தே உக்ரேய்ன் நாடு பற்றித் தெரிந்து வைத்துள்ளார் என்றும், திருப்பலியில் அருள்பணியாளருக்கு உதவிசெய்ய அவருக்கு கற்றுக்கொடுத்தது உக்ரேய்ன் அருள்பணியாளர்கள் என்றும், திருத்தந்தை கூறியதாகத் தெரிவித்த பேராயர் Kulbokas அவர்கள், புதிய பணியில் தான் எதிர்கொள்ளவிருக்கும் முக்கிய சவால் பற்றியும் எடுத்துரைத்தார்.

2004ம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருப்பீடத் தூதரகப் பணிகளைத் துவக்கிய பேராயர் Kulbokas அவர்கள், லெபனோன், நெதர்லாந்து, இரஷ்ய கூட்டமைப்பு ஆகிய நாடுகளின் திருப்பீட தூதரகங்களிலும், திருப்பீடச் செயலகத்தின், நாடுகளுடன் உறவுத் துறையிலும் பணியாற்றியுள்ளார். 2020ம் ஆண்டிலிருந்து, ஆப்ரிக்க நாடான கென்யாவில், திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2021, 13:45