லெபனோன், மத்தியக் கிழக்குப் பகுதிக்கு அமைதியின் தூதர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனோன் நாடு, இவ்வுலகில், அமைதி மற்றும் உடன்பிறந்த நிலை ஆகிய உயர்ந்த விழுமியங்களை பரப்பும் ஒரு தூதராக விளங்க, அந்நாட்டிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டளவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ஆகஸ்ட் 4, இப்புதனன்று உரையாற்றினார்.

லெபனோன் நாட்டிற்கு நிதி திரட்டும் முயற்சியாக, பிரான்ஸ் நாடும், ஐ.நா.நிறுவனமும் இணைந்து, இப்புதனன்று நடத்திய ஓர் இணையவழி கருத்தரங்கில், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் அருள்பணி Miroslaw Wachowski அவர்கள், காணொளிப்பதிவின் வழியே வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறினார்.

பன்னாட்டளவில் லெபனோன் நாட்டிற்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்கும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்த அருள்பணி Wachowski அவர்கள், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனோன் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிவிபத்தையும் நினைவுகூர்ந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அந்த பெரும் வெடிவிபத்தைத் தொடர்ந்து, திருப்பீடம், அந்நகரில், நலம் சார்ந்த முயற்சிகள், மீள்கட்டமைப்பு முயற்சிகள் மற்றும், குழந்தைகளின் கல்வி முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டது என்பதை, அருள்பணி Wachowski அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

லெபனோன் நாடு, வெறும் நிலப்பரப்பு கொண்ட நாடு மட்டுமல்ல, அது, மத்தியக் கிழக்குப் பகுதிக்கு அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் கொணரும் ஒரு நல்லெண்ணத் தூதர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய எண்ணங்களை, அருள்பணி Wachowski அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

ஆகஸ்ட் 4, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், லெபனோன் நாட்டிற்காக சிறப்பான விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டதையும், அருள்பணி Wachowski அவர்கள், தன் காணொளி உரையில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 14:09