பாராலிம்பிக் - கூடைப்பந்து விளையாட்டு பாராலிம்பிக் - கூடைப்பந்து விளையாட்டு 

பாராலிம்பிக் விளையாட்டுக்கள், நம்பிக்கையின் அடையாளம்

பொதுவாக, விளையாட்டுக்கள், பலருக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கும் வளங்களில் ஒன்று, இது, பாராலிம்பிக் விளையாட்டுக்களில் முற்றிலும் உண்மை - அருள்பணி Sanchez de Toca

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆகஸ்ட் 24, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்கள், மிகப்பெரும் நம்பிக்கையின் அடையாளம் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

கலாச்சார திருப்பீட அவையில், நேரடிப் பொதுச்செயலராகவும், அதில் விளையாட்டுக்கள் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றும், அருள்பணி Melchor Sanchez de Toca அவர்கள், பாராலிம்பிக் விளையாட்டுக்கள்பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டிளித்தபோது இவ்வாறு கூறினார்.

பிறவியிலோ, விபத்துக்களாலோ, நோய்களினாலோ மாற்றுத்திறனைப் பெற்றுள்ள விளையாட்டு வீரர்கள், எவ்வாறு தங்களின் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர் என்பதை, இந்த விளையாட்டுக்களில் நாம் காண்கின்றோம் என்றுரைத்த, அருள்பணி Sanchez de Toca அவர்கள், பொதுவாக, விளையாட்டுக்கள், பலருக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கும் வளங்களில் ஒன்று எனவும், பாராலிம்பிக் விளையாட்டுக்களில் இது முற்றிலும் உண்மை எனவும் கூறினார்.

பாராலிம்பிக் விளையாட்டுக்களைத் தொலைக்காட்சியில் பார்த்ததன் வழியாக, உந்துதல் பெற்று, அவ்விளையாட்டுக்களில் பங்குபெறுவதற்குத் தீர்மானித்த வீரர்கள் பற்றி தான் அறிந்துள்ளதாகத் தெரிவித்த அருள்பணி Sanchez de Toca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆதரவையும் அளிக்கின்றார் எனவும் எடுத்துரைத்தார்.

இப்போதைய கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்விளைவுகள், பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு, மிகுந்த சங்கடத்தை உருவாக்கியுள்ளது எனவும், மாற்றுத்திறன் கொண்ட பலருக்கு, இவ்விளையாட்டுக்கள் தூண்டுதலாக இருக்கவேண்டும் என்பதால், கலாச்சார திருப்பீட அவை, பாராலிம்பிக் விளையாட்டுக்களை, மிகுந்த நம்பிக்கையோடு நோக்கி வருகின்றது என்று Sanchez de Toca அவர்கள், கூறினார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல், ஆகஸ்ட் 8ம் தேதி வரை டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களைப்போலவே, இச்செவ்வாயன்று அந்நகரில் துவங்கியுள்ள மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்கள், பார்வையாளர்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெற்று வருகின்றது. இவ்விளையாட்டுக்கள், வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 13:53