கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜூசெப்பே வெர்ஸால்தி கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜூசெப்பே வெர்ஸால்தி 

திருப்பீடம் - ஐக்கிய அரபு அமீரகம் கல்வி ஒப்பந்தம்

இளைய தலைமுறையினரை உடன்பிறந்தநிலை என்ற உணர்வுடன் வளர்ப்பதில், திருப்பீடமும், ஐக்கிய அரபு அமீரகமும் காட்டும் அக்கறையை இவ்வொப்பந்தம் காட்டுகிறது - கர்தினால் வெர்ஸால்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கக் கல்வி பேராயத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வித்துறைக்கும் இடையே ஒன்றிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்று இவ்வாரத் துவக்கத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கும், உடன்பிறந்த உணர்வை உறுதி செய்வதற்கும் இவ்விரு அமைப்புக்களும் இணைந்து உழைக்கும் என்ற ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் குறித்து, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜூசெப்பே வெர்ஸால்தி (Giuseppe Versaldi) அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஒப்பந்தம், கல்வித்துறையை மட்டும் சார்ந்தது என்றாலும், இளைய தலைமுறையினரை வளர்ப்பதில், குறிப்பாக அவர்களை உடன்பிறந்தநிலை என்ற உணர்வுடன் வளர்ப்பதில், திருப்பீடமும், ஐக்கிய அரபு அமீரகமும் காட்டும் அக்கறையை இவ்வொப்பந்தம் காட்டுகிறது என்று கர்தினால் வெர்ஸால்தி அவர்கள் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, அரபு பள்ளிகளில் உள்ள மாணவர்களும், பேராயத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களும், பொதுவான கருத்தரங்குகளில் பங்குபெறுதல், ஒருங்கிணைந்து நல்லுறவை மேம்படுத்துதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட இயலும் என்று கர்தினால் வெர்ஸால்தி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கோவிட் பெருந்தொற்றின் நெருக்கடி நிலைகள் தளர்த்தப்பட்டபின், இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்றும், அவ்வேளையில், மாணவர்களும், ஆசிரியர்களும் கலாச்சாரப் பகிர்வுகளை உருவாக்கும் சந்திப்புக்களை மேற்கொள்வர் என்றும் கர்தினால் வெர்ஸால்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2021, 13:41