இஸ்பெயின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பணி இஸ்பெயின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பணி 

அக்கறையற்ற மனநிலை என்ற கடலில் மூழ்கிவரும் கலாச்சாரம்

மத்தியத்தரைக்கடலில் நிகழ்ந்துவரும் வேதனை தரும் படகு விபத்துக்கள், நம் இல்லங்களின் கதவுகளையும், அதற்கு மேலாக நம் உள்ளக கதவுகளையும் தட்டிக்கொண்டிருக்கின்றன - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், இவ்வாண்டு ஜூன் மாதம் வரை, கடல்வழியே ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட புலம்பெயர்ந்தோரில், மத்தியதரைக் கடலில் மட்டும் 4,071 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

பிறரன்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சான் எஜிதியோ என்ற அமைப்பு, புலம்பெயர்ந்தோருக்காக செபிக்கும் நோக்கத்துடன், ஜூன் 15, இச்செவ்வாய் மாலையில் உரோம் நகரின், திரஸ்தவேரே பகுதியில் அமைந்துள்ள சாந்தா மரியா பெருங்கோவிலில் ஏற்பாடு செய்திருந்த திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையின் ஆரம்பத்தில் மத்தியத்தரைக் கடலில் உயிரிழந்தோரைக் குறித்த விவரங்களை வழங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, மத்தியத்தரைக்கடலில் நிகழ்ந்துவரும் வேதனை தரும் படகு விபத்துக்கள், நம் இல்லங்களின் கதவுகளையும், அதற்கு மேலாக நம் உள்ளக கதவுகளையும் தட்டிக்கொண்டிருக்கின்றன என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதால், கடலில் மூழ்கி உயிரிழக்கும் மனிதர்கள், உண்மையிலேயே, அக்கறையற்ற மனநிலை என்ற கடலில் மூழ்கிவரும் நம் கலாச்சாரத்தை சுட்டிக்காட்டுகின்றனர் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் வேதனையை வெளியிட்டார்.

மத்தியத்தரைக் கடலை, அக்காலத்தில், உரோமையர்கள், 'நமது கடல்' (mare nostrum) என்று கூறி பெருமைப்பட்டனர் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், தற்போது, 'நமது கடல்', 'மரணக் கடலாக' (mare mortuum) மாறியுள்ளதை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

1990ம் ஆண்டு முதல், மத்தியத்தரைக் கடலில் இறந்த 43,390 பேரை நினைவுகூர்ந்து, இச்செவ்வாய் மாலைத் திருப்பலியில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டன என்று சான் எஜிதியோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 20, வருகிற ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இத்தாலியில், இயேசு சபையினரின் Centro Astalli, Scalabrini, Comboni துறவு சபையினர், மற்றும் எவஞ்செலிக்கல் சபையினர், புலம்பெயர்ந்தோருக்கென நடத்திவரும் மையங்களில், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மத்தியத்தரைக்கடல், ஐரோப்பாவின் மிகப்பெரிய கல்லறைத் தோட்டமாக மாறிவிட்டதென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 13, கடந்த ஞாயிறன்று தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2021, 14:58