அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு: 2021-2022 அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு: 2021-2022  

அன்பின் மகிழ்வு - இணையவழி கருத்தரங்கு, ஜூன் 9-12

"அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலைப் பொருத்தவரை நாம் எங்கு நிற்கிறோம்?" என்ற தலைப்பில், ஜூன் 9, இப்புதன் முதல், 12 இச்சனிக்கிழமை முடிய வத்திக்கானில், நடைபெறும் இணையவழி கருத்தரங்கு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட திருப்பீட அவை, "அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலைப் பொருத்தவரை நாம் எங்கு நிற்கிறோம்? இந்த அறிவுரை மடலை செயல்படுத்தும் வழிகள்" என்ற தலைப்பில், ஜூன் 9, இப்புதன் முதல், 12 இச்சனிக்கிழமை முடிய, வத்திக்கானில், இணையவழி கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது சிறப்பிக்கப்பட்டு வரும் 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டின்' ஒரு முக்கிய நிகழ்வாக, இத்திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள இணையவழி கருத்தரங்கில், உலகின் 70 ஆயர் பேரவைகளையும், 30 பன்னாட்டு இயக்கங்களையும் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஜூன் 9, இப்புதன் பிற்பகல், உரோம் நேரம் 2.00 மணிக்கு ஆரம்பமான இக்கருத்தரங்கை, பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரெல் (Kevin Farrell) அவர்கள் துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, இக்கருத்தரங்கிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒளிபரப்பானது.

குடும்பத்தினரோடு பயணித்தல், குழந்தைகளின் கல்வி, தம்பதியரின் ஆன்மீகம், குடும்பங்களின் மறைபரப்புப்பணி, குடும்பங்களில் நிலவும் சக்தியற்ற நிலை மற்றும் அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு 2021-2022 என்ற பல்வேறு தலைப்புக்களில் இந்த நான்கு நாள் கருத்தரங்கு இடம்பெறுகிறது.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவை, இந்த இணையவழி கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து வழங்குவதோடு, 2022ம் ஆண்டு, ஜூன் 22 முதல் 26 முடிய, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டிற்கென மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களையும் வழங்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2021, 14:32