C9 கர்தினால்கள் அவை C9 கர்தினால்கள் அவை 

C 9 அவை, திருப்பீடத்தின் நிதி கண்காணிப்பு குறித்து திருப்தி

உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்கள், மறைமாவட்ட மற்றும், தேசிய அளவில் இடம்பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை, C9 அவை கூட்டத்தில் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தப் பணிகளில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C9 கர்தினால்கள் அவை, திருப்பீடத் தலைமையகம், மற்றும், உலகளாவியத் திருஅவையோடு தொடர்புடைய சில விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

ஜூன் 24 இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த C9 அவையின் கர்தினால்கள், இணையம் வழியாக நடத்திய கூட்டத்தில், உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, மறைமாவட்ட அளவில் நடைபெற்றுவரும், தயாரிப்புக்கள், திருப்பீடத்தின் நிதி மேலாண்மை, உலக அளவில் பெருந்தொற்றின் இப்போதைய நிலை உட்பட சில விவகாரங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

C9 அவையின் மெய்நிகர் கூட்டம்

C9 கர்தினால்கள் அவையின் மெய்நிகர் கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த திருப்பீட தகவல் தொடர்பகம், மியான்மாரின் வேதனை நிறைந்த சூழலில் அந்நாட்டு மக்களோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருகாமையைத் தெரிவித்திருப்பதற்கு, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார் எனக் கூறியது.

பல்வேறு கண்டங்களில் கோவிட்-19 பெருந்தொற்றின் இப்போதைய நிலவரத்தை கர்தினால்கள் பகிர்ந்துகொண்டனர் என்றும், உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்கள், மறைமாவட்ட மற்றும், தேசிய அளவில் இடம்பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

அண்மைய வாரங்களில், உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தால் துவக்கி வைக்கப்பட்ட இத்தயாரிப்புப் பணிகள், உலகெங்கும் திறம்பட இடம்பெறவேண்டும் என்ற தன் ஆவலை திருத்தந்தை வெளிப்படுத்தினார் எனவும், திருப்பீடத்தின் பொருளாதாரம், மற்றும், நிதி மேலாண்மை குறித்த, அண்மை தணிக்கை அறிக்கை திருப்தி தருகின்றது என கர்தினால்கள் கூறினர் எனவும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

2013ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட, C9 கர்தினால்கள் அவையின் அடுத்த கூட்டம், இவ்வாண்டு செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டூராஸ் நாட்டு கர்தினால் Óscar Rodríguez Maradiaga, ஜெர்மனி நாட்டு கர்தினால் Reinhard Marx, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Sean Patrick O'Malley, இந்தியாவின் கர்தினால் கிரேசியஸ், காங்கோ சனநாயக குடியரசின் கர்தினால் Fridolin Ambongo Besungu, வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அமைப்பின் தலைவர், மற்றும், வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் துறை தலைவரான கர்தினால் Giuseppe Bertello, C9 கர்தினால்கள் அவையின் செயலர் ஆயர் Marco Mellino ஆகியோர், இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 15:06