நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

டிஜிட்டல் உலகில் மறைப்பரப்புப்பணி – கர்தினால் தாக்லே

தற்போதைய பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்பம் நிறைந்த நேரத்தில், பாப்பிறை மறைப்பரப்புப்பணிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், துன்புறுவோர் அருகே இருந்து வந்துள்ளனர் - கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தற்போதைய பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்பம் நிறைந்த நேரத்தில், பாப்பிறை மறைப்பரப்புப்பணிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், துன்புறுவோர் அருகே ஆதரவாக இருந்தனர் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

ஜூன் 1, இச்செவ்வாய் முதல், 3, இவ்வியாழன் முடிய, பாப்பிறை மறைப்பரப்புப்பணிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மேற்கொண்ட மெய் நிகர் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், திருஅவையின் மறைப்பரப்புப்பணிகள், இந்தப் பெருந்தொற்று காலத்தில் அதிக தடையின்றி சென்றது குறித்து தன் மகிழ்வையும், பாராட்டையும் வெளியிட்டார்.

பாப்பிறை மறைப்பரப்புப்பணிக் கழகங்கள், நிதி திரட்டும் அமைப்புக்கள் அல்ல என்பதை தன் உரையில் தெளிவுபடுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைபரப்புப்பணியை மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்துவதே இவ்வமைப்புக்களின் முக்கியப்பணி என்று எடுத்துரைத்தார்.

மறைப்பரப்புப்பணியின் ஒரு முக்கிய கூறாக விளங்கும் நற்செய்திப் பகிர்வு பற்றி பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், நாம் தற்போது வாழும் டிஜிட்டல் உலகில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நற்செய்தியை, படைப்புத்திறனோடு பகிர்ந்துவரும் இளையோரைப் பாராட்டினார்.

முகமுகமாய் சந்திக்கும் வாய்ப்புக்களைத் தடை செய்துவிட்ட பெருந்தொற்று காலத்தில், தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறித்து, பாப்பிறை மறைப்பரப்புப்பணிக் கழகங்கள், இன்னும் ஆழமான புரிதலைப் பெறுவது அவசியம் என்பதையும், கர்தினால் தாக்லே அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2021, 14:54