புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் தாக்லே புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் தாக்லே 

கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அன்பு என்பது செயல்பாடுடையது

துயருறும் மக்களைப் புரிந்துகொண்டு, தாழ்ச்சியுடன், அவர்களுக்குரிய மதிப்பை வழங்கி செயல்படும்போது, துன்பதுயர்களே, நம்மை உடன்பிறந்த நிலைக்குக் கொணர்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உதவித் தேவைப்படும் மக்களுக்கு பணியாற்றுவது, ஒரு வேலையல்ல, மாறாக இயேசுவின் மீட்பளிக்கும் அன்பில் நாமும் பங்குபெற்று சேவையாற்றுவதாகும் என, இத்தாலிய கத்தோலிக்கக் காரித்தாஸ் பணியாளர்களிடம் கூறினார், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலில், 'பிறரன்பின் பாதை' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செபக்கூட்டத்தில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபோது, கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அன்பு என்பது, வெறும் உணர்வோ, கருத்தோ அல்ல, மாறாக, தூய ஆவியாரின் கொடைகளைச் செயல்பாடுடையதாக மாற்றுவதாகும் என எடுத்துரைத்தார்.

தூய ஆவியார் வழங்கும் கொடைகளால் நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணவோ, அவர்களை நம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தவோ முன்வரக் கூடாது என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், அன்புடன்கூடிய பணியை பொதுமக்கள் அனைவரின் நலனையும் மனதில் கொண்டதாக எடுத்து நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிறருக்கு வழங்கவேண்டுமென்ற ஆர்வம், இலாப நோக்கத்தைவிட மதிப்புமிக்கது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், நம்மிடமிருப்பதை, பிறருடன் பகிர்வது என்பது, நற்செய்தியை அறிவிப்பதாகும் எனவும் எடுத்துரைத்தார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகவும், அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படும் கர்தினால் தாக்லே அவர்கள், துயருறும் மக்களைப் புரிந்துகொண்டு, தாழ்ச்சியுடன், அவர்களுக்குரிய மதிப்பை வழங்கி செயல்படும்போது, துன்பதுயர்களே, நம்மை உடன்பிறந்த நிலைக்குக் கொணர்கிறது என எடுத்துரைத்தார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கொணர்ந்த புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, 1971ம் ஆண்டு புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வேண்டுகோளின்படி துவக்கப்பட்ட இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு, இன்று 218 மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்புக்களாக இத்தாலி முழுவதும் சேவையாற்றிவருகிறது.

இத்தாலிய காரித்தாசின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் அங்கத்தினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வழங்கினார்.                              

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 14:59