பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை திருப்பீடம் வரவேற்கிறது

அரசு ஊழியர்கள், நீதி, நேர்மையான நிதி மேலாண்மை, நல்ல நிர்வாகம், மற்றும், சமுதாயப் பொறுப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டியது முக்கியம் - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராகத் துணிந்து செயல்படவேண்டும் மற்றும், அக்குற்றங்கள் கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும் என்று, பன்னாட்டு வெளியுறவுத் துறையின் திருப்பீடச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை நடத்திய சிறப்பு அமர்வு ஒன்றில் விண்ணப்பித்தார்.

"ஊழலைத் தடுத்து நிறுத்த எதிர்கொள்ளப்படும் சவால்களும், அவற்றுக்கு எதிராகச் செயல்பட, பன்னாட்டளவில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளும்" என்ற தலைப்பில், நியுயார்க் நகரில், சூன் 3, இவ்வியாழன், 4 இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் காலகர் அவர்கள், இவ்வாறு கூறினார்.

பன்னாட்டு அளவில் இடம்பெறும் ஊழலை ஒழிப்பதற்கு, ஐ.நா. மேற்கொண்டுவரும் முயற்சிகளை திருப்பீடம் வரவேற்கின்றது என்று தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், பணக்கார, மற்றும், ஏழை நாடுகள் என்ற வேறுபாடின்றி, எல்லாப் பகுதிகளிலும் ஊழல் இடம்பெறுகின்றது என்று கூறியுள்ளார்.

ஊழல் குற்றங்கள், சமுதாய நீதியின் அறநெறிக் கோட்பாடுகள், மற்றும், விதிமுறைகளைப் புறக்கணிப்பதோடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இடம்பெறவும், வறுமையை ஒழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பின்னடையச் செய்கின்றன என்றும், பேராயர் காலகர் அவர்கள் எடுத்துரைத்தார்.

அரசு நிறுவனங்கள் மீதும், ஆள்கின்ற மற்றும், ஆளப்படுகின்ற குழுமத்திற்கிடையேயும்,  நம்பிக்கையின்மை குறைத்திருப்பதோடு, சிறப்பாக அமைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் நல்ல மேலாண்மையையும், ஊழல் சீர்குலைக்கின்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ள பேராயர் காலகர் அவர்கள், அனைவருக்கும் நீதி கிடைப்பதற்கு நாம் வழியமைக்கவேண்டுமெனில், ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், நீதி, நேர்மையான நிதி மேலாண்மை, நல்ல நிர்வாகம், மற்றும், சமுதாயப் பொறுப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், சட்ட விதிமுறையும், குற்றத் தடுப்பு நடவடிக்கையும் இணைந்தே செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2021, 15:50