1971ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, 6ம் பவுல் அரங்கத்தை திறந்துவைத்த திருத்தந்தை புனித 6ம் பவுல் 1971ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, 6ம் பவுல் அரங்கத்தை திறந்துவைத்த திருத்தந்தை புனித 6ம் பவுல் 

50 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட 6ம் பவுல் அரங்கம்

6ம் பவுல், முதலாம் யோவான் பவுல், 2ம் யோவான் பவுல், 16ம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகிய ஐந்து திருத்தந்தையர், மக்களைச் சந்திக்க பயன்படுத்தியுள்ள 6ம் பவுல் அரங்கம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில், தற்போது, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கம் என்றழைக்கப்படும் மாபெரும் அரங்கம், சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 1971ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த அரங்கத்தை வடிவமைத்த கட்டடக்கலைஞர் Pier Luigi Nervi அவர்களின் பெயரால், இந்த அரங்கம் துவக்கத்தில் Nervi அரங்கம் என்றே அழைக்கப்பட்டது.

இந்த அரங்கத்தை திறந்துவைத்து, முதல்முறையாக அங்கு மக்களை சந்தித்த, அன்றையத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மக்களைச் சந்திப்பது, திருத்தந்தையின் ஒரு முக்கியப் பணி என்பதை திருஅவை உணர்ந்துவருவதால், அதன் ஒரு வெளி அடையாளமாக, இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று, இந்த முதல் சந்திப்பில் கூறினார்.

6ம் பவுல், முதலாம் யோவான் பவுல், 2ம் யோவான் பவுல், 16ம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகிய ஐந்து திருத்தந்தையர், மக்களைச் சந்திக்க பயன்படுத்தியுள்ள இந்த அரங்கம், 6,300 பேர் அமர்ந்திருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கம், மக்களைச் சந்திக்கும் அரங்கமாக மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக, அது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீடற்ற வறியோரோடு விருந்துண்ட அரங்கமாகவும், அண்மைய நாள்களில், கோவிட் பெருந்தொற்று தடுப்பூசி வழங்கும் மருத்துவமனையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Knights of Columbus என்ற அமைப்பினரின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தின் கூரையில், சூரிய சக்தியை உள்வாங்கும் தகடுகள் பொருத்தப்பட்டு, 2008ம் ஆண்டு முதல், இந்த அரங்கத்தின் ஒளிவிளக்குகள், சூரிய சக்தியைப் பயன்படுத்துகின்றன.

இந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் அரங்கமும், வேறுபல அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2021, 16:01