ஆயர்கள் மாமன்றம் தலத்திருஅவைகளில் துவங்கும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப்பணியைத் துவக்கியது முதல், திருஅவையின் உலகளாவிய பண்பு, காணக்கூடிய முறையில் தெளிவாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் மாதத்தில், மூன்றாண்டு ஆயர்கள் மாமன்றப் பயணம் ஒன்றைத் துவக்கிவைப்பார் என்றும், மறைமாவட்ட, நாடுகள், மற்றும், உலக அளவில் நடைபெறும் அப்பயணம், கருத்தறிதல், மற்றும், தெளிந்துதேர்தல் முறைகளில் நடைபெற்று, இறுதியில், வத்திக்கானில் 2023ம் ஆண்டு அக்டோபரில், உலக ஆயர்கள் மாமன்றத்தோடு நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப்பணியைத் துவக்கியது முதல், திருஅவையின் உலகளாவிய பண்பு, காணக்கூடிய முறையில் தெளிவாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி வரும்வேளை, அதற்கேற்ற முறையில், 2023ம் ஆண்டில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டுள்ள உலக ஆயர்கள் மாமன்றம் இடம்பெறும்.

உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில் மட்டுமல்லாமல், ஐந்து கண்டங்களிலும், ஒவ்வொரு தலத்திருஅவையிலும் கொண்டாடப்படும் என்பதை விளக்க, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகம் தயாரித்த புதிய நடைமுறை விளக்கங்களை, மே 21, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்.

முதல் நிலை

உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் படி, வருகிற அக்டோப்ர 9, 10 ஆகிய தேதிகளில் வத்திக்கானில் திருத்தந்தை தலைமையேற்று நடத்தும், இறைவேண்டல், திருப்பலி, தியானம், சிந்தனை ஆகியவற்றோடு துவக்கி வைக்கப்படும்.

மறைமாவட்ட அளவில்

இரண்டாவதாக, அது, மறைமாவட்ட அளவில், தல ஆயரின் தலைமையில், வருகிற அக்டோபர் 17ம் தேதி துவங்கும். இது, இறைமக்களின் கருத்தறிதல் மற்றும், பங்கேற்புடன் நடைபெறும். அதற்கு உதவியாக, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகம், கேள்வித்தொகுப்பை அனுப்பிவைக்கும். அதன் அடிப்படையில் மறைமாவட்ட மாமன்றத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறும். அதே கேள்வித்தொகுப்பு, திருப்பீட பல்வேறு துறைகள், இருபால் துறவு சபை தலைவர்கள் அமைப்பு, துறவியர் கூட்டமைப்புகள், பன்னாட்டு பொதுநிலையினர் இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும், இறையியல் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வோர் ஆயரும், 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதத்திற்குமுன், மறைமாவட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும். அவர் தலஆயர் பேரவையோடு இணைந்து செயல்படுவார். பின்னர், பொதுச்செயலகத்தோடு ஒத்துழைப்பதற்கு, ஆயர் பேரவை ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ நியமிக்கும்.

மறைமாவட்ட மாமன்றத்தின் பரிந்துரைகள், தல ஆயர் பேரவைக்கு அனுப்பப்படும். அந்தப் பேரவை அவற்றைத் தொகுத்து, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச்செயலகத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த முதல்நிலை, 2022ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடையும்.

பொதுச்செயலகம், இவற்றை வைத்து, முதல் வரைவுத் தொகுப்பைத் தயாரித்து, 2022ம் ஆண்டு செப்டம்பரில், தலத்திருஅவைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கண்டம் வாரியாக: கலந்துரையாடல் மற்றும் தெளிந்துதேர்தல்

2022ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து, 2023ம் ஆண்டு மார்ச் வரை மாமன்ற தயாரிப்புப் பணிகள் கண்டம் வாரியாக நடைபெறும். முதல் வரைவுத் தொகுப்பின் அடிப்படையில் கலந்துரையாடல் நடத்தி, இவை அனுப்பிவைக்கும் பரிந்துரை தொகுப்பு, 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுச்செயலகத்திற்கு வந்துசேரும்.

இந்தத் தொகுப்பின் அடிப்படையில் பொதுச்செயலகம், இரண்டாவது வரைவுத் தொகுப்பை, 2023ம் ஆண்டு ஜூனில் அனுப்பி வைக்கும். அதற்குப்பின் 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தோடு இது நிறைவடையும் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2021, 15:10