காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்வதற்கு கட்டாயப்படுத்தப்படும் மக்கள் காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்வதற்கு கட்டாயப்படுத்தப்படும் மக்கள் 

சுற்றுச்சூழல் நெருக்கடி - துரிதமாக்கப்பட்ட மக்களின் இடம்பெயர்தல்

சற்றும் எதிர்பாராத வேளையில் நம்மைத் தாக்கிய கோவிட் 19 பெருந்தொற்றைப்போல் அல்லாமல், சுற்றுச்சூழல் குறித்த நெருக்கடி, நம்மைச் சுற்றி கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதை அறிவோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சற்றும் எதிர்பாராத வேளையில் நம்மைத் தாக்கிய கோவிட் 19 பெருந்தொற்றைப்போல் அல்லாமல், சுற்றுச்சூழல் குறித்த நெருக்கடி நம்மைச் சுற்றி கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதை அறிவோம் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், "COP 26 - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் துரிதமாக்கப்பட்டிருக்கும் மக்களின் இடம்பெயர்தல்" என்ற தலைப்பில், மே 25, இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில், இவ்வாறு உரையாற்றினார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், உலகெங்கும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது என்றாலும், இவற்றால் மிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவது, வறுமைப்பட்ட மற்றும் மிகவும் நலிவுற்ற மக்கள் சமுதாயமே என்பதை, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் நெருக்கடி என்ற பிரச்னைக்கு மனித முகம் ஒன்று உண்டு என்பதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மனிதர்களின் சுயநல பேராசைகளே இந்த நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ற பிரச்சனையைக் குறித்து, COP 26 உச்சிமாநாட்டில் விவாதிக்கும் வேளையில், அந்தப் பிரச்சனையை, மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனையாக சிந்திக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் கூறினார்.

ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோ நகரில், 2020ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த COP 26 சுற்றுச்சூழல் உச்சிமாநாடு, கோவிட் 19 உருவாக்கிய நெருக்கடியின் காரணமாக, இவ்வாண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2021, 14:13