சுவிஸ் வீரர்களுக்கு கர்தினால் பரோலின்  திருப்பலி சுவிஸ் வீரர்களுக்கு கர்தினால் பரோலின் திருப்பலி 

சுவிஸ் வீரர்களுக்கு கர்தினால் பரோலின் வழங்கிய மறையுரை

ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளார், அத்திட்டங்களுக்கு ஏற்ப நாம் வாழ்வதற்கு, முதலில், "என் அன்பில் நிலைத்திருங்கள்" என்று அவர் கூறும் அன்புக்கட்டளைக்கு செவிமடுக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளார், அத்திட்டங்களுக்கு ஏற்ப நாம் வாழ்வதற்கு, முதலில், "என் அன்பில் நிலைத்திருங்கள்" என்று அவர் கூறும் அன்புக்கட்டளைக்கு செவிமடுக்கவேண்டும் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மே 6, இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், புதிதாக இணைந்த 34 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும், இவ்வியாழன் காலை, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன்னுடன் இணைந்திருக்குமாறு தன் சீடர்களிடம் இயேசு விடுக்கும் அழைப்பைக் கூறும் இன்றைய நற்செய்தியையொட்டி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டவருடன் ஆன்மீக அளவில் இணைந்திருக்கும் வேளையில், அந்த இணைப்பின் வெளிப்பாடாக, நம் வாழ்வும், செயல்பாடுகளும் அமையும் என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் வாழ்வும், ஆண்டவரோடும், அவரது பிரதிநிதியான திருத்தந்தையோடும் இணைந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

பிரச்சனை ஒன்று எழுந்த வேளையில், அதனை, ஓர் இறைவாக்கினருக்குரிய துணிவுடன் சந்தித்த பேதுருவை, இன்றைய முதல் வாசகத்தில் (தி.ப. 15:7-21) நாம் காண்கிறோம் என்று, தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அந்தப் பேதுருவின் வழித்தோன்றல்களுக்குப் பணியாற்ற முன்வந்திருக்கும் இளையோருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பில், 34 இளைஞர்கள் புதிதாக இணைந்த நிகழ்வு, காலை 7.30 மணிக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியுடன் ஆரம்பமானது.

பொதுமக்களின் பங்கேற்பின்றி இடம்பெற்ற இந்நிகழ்வு, சுவிஸ் கார்ட்ஸ் (www.guardiasvizzera.ch) இணயதளத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2021, 14:32