இலங்கை காய்கறி சந்தை இலங்கை காய்கறி சந்தை 

உணவு அமைப்புகளின் மீள்கட்டமைப்பின் அவசரத் தேவை

உணவுப் பாதுகாப்பின்மைக்கு, வறுமை, புறக்கணிப்பு, அரசியலில் சனநாயகமின்மை, போர்கள், சுற்றுச்சூழல் அழிவு, பல்லுயிர்கள் அழிவு, காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் போன்றவை காரணங்களாகும் - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தற்போது உலகில் நிலவும் உணவுப் பற்றாக்குறை பிரச்சனை, பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளோடு பின்னிப்பிணைந்துள்ளது, மற்றும், இந்நிலை, கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியால் மேலும் மோசமடைந்துள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், மே 26, இப்புதனன்று கூறினார்.

உரோம் நகரில் வருகிற ஜூலை மாதத்தில், உணவு பாதுகாப்பு அமைப்புகள் குறித்து, ஐக்கிய நாடுகள் நிறுவனம், பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தவுள்ளவேளை, அதற்குத் தயாரிப்பாக, திருப்பீடத்தில் நடைபெற்ற இணையம்வழி மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறினார்.

உணவுப் பாதுகாப்பின்மைக்கு, உணவுப் பற்றாக்குறை மட்டுமல்ல, வறுமை, புறக்கணிப்பு, அரசியல் நடவடிக்கைகளில் சனநாயக முறைகள் இல்லாமை, போர்கள், சுற்றுச்சூழல் அழிவு, பல்லுயிர்கள் அழிவு, காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் போன்ற அனைத்தும் காரணங்களாக உள்ளன என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இவை, உலக அளவில் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளதோடு, வலுவற்ற சமுதாயங்களின் நிலைமைகளையும்,  ஏற்கனவே நலிவடைந்துள்ள உலகளாவிய உணவு அமைப்பையும், கூடுதலாக மோசமடையச் செய்துள்ளன என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கவலை தெரிவித்தார்.

இக்காரணங்களால், உணவு பாதுகாப்பு அமைப்புகள், சீரமைக்கப்படவேண்டும், விவசாயிகளின் மாண்பும், பணிகளும் பாதுகாக்கப்படவேண்டும், உலக அளவில் உணவு, விநியோகிக்கப்பட, நிதிச்சந்தைகள் ஒழுங்குபடுத்தப்படுவதற்கு ஆதரவு வழங்கப்படவேண்டும், மற்றும், படைப்பைப் பாதுகாக்கும் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வாழ்வுக்காக உணவு, அனைவருக்கும் உணவு, உணவு அமைப்பில் நீதி என்ற தலைப்பில் திருப்பீடம், இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ள வளர்ச்சித்திட்ட இலக்குகளின் பத்தாண்டு செயல்திட்டம் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உரோம் நகரில், வருகிற ஜூலை மாதம் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை உணவு அமைப்புகள் குறித்த இந்த பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2021, 13:53