கர்தினால் பியெத்ரோ பரோலின் (5 ஏப்ரல் 2020) கர்தினால் பியெத்ரோ பரோலின் (5 ஏப்ரல் 2020) 

மனம், உடல், ஆன்மாவைத் தேடுதல் கருத்தரங்கிற்கு செய்தி

உண்மையிலே நம்மை மனிதராக ஆக்குவது எது என்பது குறித்து ஆர்வத்தோடும், மனஉறுதியோடும் தொடர்ந்து தேடலை மேற்கொள்ள அழைப்பு - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"மனம், உடல், மற்றும், ஆன்மாவைத் தேடுதல்: மனிதநலத்தை மேம்படுத்த வியத்தகு மற்றும், புதுவகையான அமைப்புமுறைகள்" என்ற தலைப்பில், மே 6, இவ்வியாழன் முதல், மே 8, இச்சனிக்கிழமை வரை நடைபெற்ற, ஐந்தாவது பன்னாட்டு கருத்தரங்கிற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீட செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட, சுற்றுச்சூழல், பொருளாதாரம், மனிதநலத்தைப் பராமரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், மனிதரிடம் அன்பு, பொதுநலப்பண்பு ஆகிய தலைப்புக்கள் அனைத்தும், மனிதரை மையப்படுத்தியவை என்றுரைத்துள்ள, கர்தினால் பரோலின் அவர்கள், நாம் யார் என்று, தொன்றுதொட்டு கேட்கப்பட்டு வருகின்ற கேள்வி, இக்காலத்திற்கும்கூட, பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார்.

இந்த பூமிக்கோளத்தில், தான் எல்லா வல்லமையும் நிறைந்தவர் என்று ஊகிக்காமல், தன்னையே உற்றுநோக்க, இன்று, மனித சமுதாயம் அழைக்கப்படுகிறது என்றும், மற்ற உயிரினங்களை நாம் சார்ந்துவாழ்கின்றோம் என்றும் உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தல், அறநெறிசார்ந்த மனச்சான்று ஆகிய இரு அம்சங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

நம்மைப்பற்றி மிக நன்றாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலை நாம் பெற்றுள்ளோம், நாம் வாழ்கின்ற, சிந்திக்கின்ற மற்றும், செயலாற்றுகின்ற முறைகளைப் பாதிக்கும் சமுதாய-கலாச்சார, புவியியல், பொருளாதார வழிகள், மற்றும், ஏனைய அமைப்புகளை வளர்த்துவருகிறோம், ஆயினும், நன்மை எது, தீமை எது என்று பிரித்தறிந்து செயல்படவைக்கும் நன்னெறி மனச்சான்று ஒன்று உள்ளது என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நமது செயல்கள், நமது சமுதாயம், நாம் உருவாக்கியுள்ள கருவிகளைப் பயன்படுத்தும் மற்றும், அவை அனைவருக்கும் கிடைக்குமாறு வழிசெய்யும் முறை பற்றி சிந்தித்துப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தீமைக்கு முரணாக அமைகின்ற பொதுநலப் பண்பு மற்றும், மனிதர் மீது அன்பு ஆகியவை வழியாக, அநீதிகளைப் புறக்கணித்து, அவற்றுக்கு முடிவுகட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனிதரின் தனித்துவம், மற்றும், மனிதரின் விழுமியங்கள் குறித்து, பழங்காலத்திலிருந்தே அறிஞர்கள் சிந்தித்து வருகின்றனர் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், உண்மையிலேயே நம்மை மனிதராக ஆக்குவது எது, மனிதர் பற்றிய உண்மைகள் என்ன என்பது குறித்து ஆர்வத்தோடும், மனஉறுதியோடும் தொடர்ந்து தேடலை மேற்கொள்ளுமாறு, அந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டோருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த பன்னாட்டு கருத்தரங்கை, திருப்பீட கலாச்சார அவையும், அறிவியல் மற்றும், நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட STOQ என்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்தன. திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்களுக்கும், STOQ நிறுவனத்தின் தலைவர் ரெனாத்தோ பொலேத்தி அவர்களுக்கும், கர்தினால் பரோலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2021, 15:20