நேபாளத்தில் முஸ்லிம்கள் செபம் நேபாளத்தில் முஸ்லிம்கள் செபம் 

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், நம்பிக்கையின் சாட்சிகள்

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும், நம்பிக்கையின் பாதைகளில் தொடர்ந்து முன்னேற, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவர்களாக வாழ அழைப்பு – பல்சமய உரையாடல் திருப்பீட அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்,  உலகில் நம்பிக்கையின் சாட்சிகளாக வாழுமாறு, பல்சமய உரையாடல் திருப்பீட அவை, இரமதான் நோன்பு மாதம், மற்றும், ‘Id al-Fitr’ விழாவுக்கென்று வெளியிட்ட செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 13, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள இரமதான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, உலகின் முஸ்லிம்கள் அனைவருக்கும், ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று, “கிறிஸ்தவர்கள், மற்றும், முஸ்லிம்கள்: நம்பிக்கையின் சாட்சிகள்” என்ற தலைப்பில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பல்சமய உரையாடல் திருப்பீட அவை, முஸ்லிம்களுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று போன்ற சூழல்களில், நாம் கடவுளின் இரக்கம், மன்னிப்பு, பராமரிப்பு போன்றவற்றோடு, ஆன்மீக, மற்றும், பொருளாதாரக் கொடைகளையும் அவரிடம் இறைஞ்சுகிறோம், ஆயினும், இந்தக் காலக்கட்டத்தில், நமக்கு நம்பிக்கை அதிகம் தேவைப்படுகின்றது என்று, அச்செய்தி கூறியுள்ளது.

நம்பிக்கை என்பது, நேர்மறை எண்ணத்தை உள்ளடக்கியது என்பதை நாம் அறிந்திருந்தாலும், நேர்மறை எண்ணம் என்பது, மனிதக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையது, ஆனால், நம்பிக்கை என்பது, கடவுள் நம்மை அன்பு கூர்கிறார், அவரது பராமரிப்பால் நம்மைக் காத்து வருகிறார் என்ற, மத உணர்வை அடிப்படையாகக்கொண்டது என்று, அச்செய்தி கூறியுள்ளது.

மனிதரில் நன்மைத்தனம்

நாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில், கடவுள் நம்மைப் பராமரித்து காத்துவருகிறார் என்றுரைக்கும் அச்செய்தி, நம் பிரச்சனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை ஏற்பதிலிருந்து பிறப்பது, நம்பிக்கை என்றும், இது, எல்லா மனிதரிலும் நன்மைத்தனம் பிரசன்னமாக இருக்கின்றது என்பதை ஏற்கச் செய்கின்றது என்றும் கூறியுள்ளது.

மனித உடன்பிறந்தநிலை

மனித உடன்பிறந்த உணர்வு, தன் அனைத்து பரிமாணங்களுடன், அனைவருக்கும்  நம்பிக்கையின் ஊற்றாக உள்ளது என்றும், இந்த உணர்வு, பேரிடர் காலங்களில், விரைவாகவும், தாராளம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வோடும் நம் உடன்வாழ்வோரைச் செயல்படவைக்கின்றது என்றும், இவர்களில் வெளிப்படும் இந்த நன்மைத்தனம், உடன்பிறந்த உணர்வு, உலகளாவியப் பண்பாகும் என்பதை, நம்பிக்கையாளர்களாகிய நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், அச்செய்தி கூறியுள்ளது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாப்பதும், அதன்மீது அக்கறை காட்டுவதும் அதிகரித்துவருவது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துப்படி, நம்பிக்கையின் மற்றுமோர் அடையாளம் என்றுரைக்கும் அச்செய்தி, நம்பிக்கையின் எதிரிகளையும் குறிப்பிட்டுள்ளது.

கடவுளின் அன்பு, அவரது பராமரிப்பு போன்றவற்றில் சந்தேகம், மனச்சோர்வு, நம் உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை இழப்பு போன்ற, நம்பிக்கைக்கு எதிரான பகைவர்களைக் குறிப்பிட்டுள்ள அச்செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தன் திருமடலில், திருத்தந்தை பல இடங்களில் நம்பிக்கை பற்றி பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுமாகிய நாம், நம்பிக்கையின் பாதைகளில் தொடர்ந்து முன்னேறுவோம், நம்பிக்கையின் சான்றுகளாக, அதனைக் கட்டியெழுப்புவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம் என்ற அழைப்புடன், பல்சமய உரையாடல் திருப்பீட அவை அச்செய்தியை நிறைவுசெய்துள்ளது.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், இச்செய்தியில் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளார். இந்த இரமதான் நோன்பு மாதம், வருகிற மே மாதம் 12ம் தேதியன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2021, 13:19