வியட்நாம் நாட்டில் திருத்தொண்டர்களாக அருள்பொழிவு பெறுவோர் வியட்நாம் நாட்டில் திருத்தொண்டர்களாக அருள்பொழிவு பெறுவோர் 

2019ல் உலக கத்தோலிக்கரின் வளர்ச்சி 1.12 விழுக்காடு

அருள்பணியாளர்களின் எண்ணிக்கை, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், குறைந்து வரும் வேளையில், அதே கண்டங்களில், நிரந்தர திருத்தொண்டர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டில் திருஅவையில், கத்தோலிக்கர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் குறித்த துல்லிய விவரங்களை, 2021 ஆண்டு ஏடாக, மார்ச் 25, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

2019ம் ஆண்டின் நிலவரங்கள் குறித்த முழு விவரங்களைத் தொகுத்து வழங்கியுள்ள இவ்வேடு, 2019ம் ஆண்டில், உலகெங்கும், 134 கோடியே 50 இலட்சம் கத்தோலிக்கர்கள் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 1 கோடியே 60 இலட்சம் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

2019ம் ஆண்டில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 1.12 விழுக்காடு அதிகம் எனவும், இந்த வளர்ச்சி உலக மக்கள்தொகை வளர்ச்சியான 1.08 என்பதோடு ஏறக்குறைய ஒத்திணங்கிச் செல்கின்றது எனவும் தெரிவிக்கிறது.

உலகின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, கத்தோலிக்கர்களின் எணிக்கை, 17.7 விழுக்காடு என்ற அளவில், ஒரே சீராக இருந்து வருவதாகவும், ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த கண்டங்களின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, 2018ம் ஆண்டில் 48.3 விழுக்காடாக அமெரிக்கக்கண்டத்தில் இருந்த கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை, 2019ம் ஆண்டில் 48.1 விழுக்காடாகவும், ஐரோப்பாவில் 21.5 என்பதிலிருந்து 21.2 விழுக்காடாகவும் குறைந்துள்ளதாகவும், ஆப்ரிக்கக் கண்டத்தில் இது 18.3 விழுக்காடு என்பதிலிருந்து 18.7 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும்,  தென்கிழக்கு ஆசியாவிலும் மிகச்சிறிய அளவில் அதிகரிப்பு காணப்பட்டதாகவும், ஓசியானிய பகுதியில் இது ஒரே சீராக இருந்து வருவதாகவும், 2021ம் ஆண்டின் திருஅவை ஏடு தெரிவிக்கிறது.

2019ம் ஆண்டில், உலகில், 5364 ஆயர்கள் இருந்ததாகவும், இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 13 குறைவு எனவும், உலகின் ஆயர்களுள், 68.8 விழுக்காட்டினர், ஐரோப்பா, மற்றும் அமெரிக்கக்கண்டத்தில் இருந்ததாகவும், ஆசியாவில் 15.2 விழுக்காடு, ஆப்ரிக்காவில் 13.4 விழுக்காடு, மற்றும் ஓசியானியாவில் 2.6 விழுக்காடு ஆயர்கள் இருந்ததாக இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 414,336 ஆக இருந்தது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 271 அதிகம் எனக்கூறும் திருஅவை ஏடு, இது ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் வெளிப்பாடாக உள்ளது எனவும் கூறுகிறது.

அருள்பணியாளர்களின் எண்ணிக்கை, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், குறைந்து வரும் வேளையில், அதே கண்டங்களில், நிரந்தரத் திருத்தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்படாமல் வாழும் துறவிகளின் எண்ணிக்கையும் உலக அளவில் குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டில் பெண் துறவியரின் எண்ணிக்கையில், ஆப்ரிக்கா அதிக அளவு வளர்ச்சியைக் கண்டதாகவும், அதற்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவில் வளர்ச்சி  இடம்பெற்றதாகவும் கூறும் இந்த ஏடு, ஐரோப்பா, அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் பெண் துறவியரின் எண்ணிக்கை, மிகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.

அருள்பணியாளராக பயிற்சிபெற வருவோரின் எண்ணிக்கை, 2019ம் ஆண்டில்  உலக அளவில் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 58 ஆக இருந்ததாகவும், இதில் 33,821 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனவும்,  32,721 பேர் ஆப்ரிக்கா, 30,664 பேர் அமெரிக்கா,  15,888 பேர் ஐரோப்பா, மற்றும், 964 பேர் ஓசியானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2021, 16:01